News
2.90 கோடி மோசடி வழக்கு நடிகர் சூரியிடம் போலீசார் விசாரணை !
வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சிரிப்பு நடிகராக நடித்துள்ளவர் சூரி, இவர் வெண்ணிலா கபடி குழுவில் நடித்துள்ள விஷ்ணுவுடன் இணைந்து நடித்துள்ளார். அப்போது நடிகர் விஷ்ணுவின் தந்தையும், முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மூலம் இடம் வாங்கி தருவதாக கூறி ₹2.90 கோடி பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் சொன்ன படி நடிகர் சூரிக்கு நிலம் வாங்கி கொடுக்கவில்லை, கொடுத்த பணத்தை கேட்ட போது நடிகர் விஷ்ணு மற்றும் அவரது தந்தை மிரட்டியதாக நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அவரது மகன் நடிகர் விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.
இதனால் நடிகர் சூரி தனது புகார் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி விரைவில் விசாரணை நடத்தக் கோரி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா விசாரணையை தொடங்கியுள்ளார்.
இதையடுத்து விசாரணையின் முதல் கட்டமாக பணம் கொடுத்ததாக கூறப்பட்ட நடிகர் சூரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னை, ேவப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா முன்பு அவர் ஆஜரானார். அப்போது அவரிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை இரவு 8 மணிக்கு முடிந்தது.