Connect with us
 

Reviews

பொன்னியின் செல்வன் 2 – திரைவிமர்சனம் !

Published

on

Movie Details

பல ஜாம்பவான்கள் எடுக்க முயன்று முடியாத ஒரு திரைப்படம் இந்த பொன்னியின் செல்வன் 2. அப்படத்தை எடுத்து முடித்ததே மிகப்பெரிய மாபெரும் சாதனை. இந்த சாதனையை நடத்தி முடிக்க முன்வந்த தயாரிப்பு நிறுவனம் லைக்கா நிறுவனத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடியே ஆகவேண்டும்.

இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்திலேயே ஆதித்த கரிகாலன், நந்தினி ஆகியோரின் இளமைக்கால சந்திப்பு காதல் இவையுடன் படம் ஆரம்பித்து படத்தின் டைட்டில் போட்டு படத்தை ஆரம்பித்து வைக்கிறார் மணிரத்னம். அதன் பின்னர் முதல் பாகத்தில் எங்கு முடிந்தது அதை உலக நாயகனின் கம்பீர குரலுடன் சின்ன விளக்கவுரையுடன் இரண்டாம் பாகத்தின் கதைக்குள் நம்மை அழைத்து செல்கிறார்.

கடல் சீற்றத்தில் சிக்கி கடலில் மூழ்கிய அருண்மொழிவர்மன், வந்தியத் தேவன் ஆகியோர் உயிருடன் இருக்கிறார்கள் என்று நமக்கு காட்டப்படுகிறது. அதே சமயம் ஆதித்த கரிகாலனை கொன்று வஞ்சம் தீர்க்க வேண்டும் என துடிக்கும் நந்தினி சோழ ராஜ்ஜியத்தை காப்பாற்ற குந்தவை எடுக்கும் முயற்றி, சிற்றார்கள் செய்யும் சதியை அவர்களின் இடத்திற்கே சென்று ஏளனம் செய்யும் ஆதித்த கரிகாலன் தனியாக சென்று சந்திக்க செல்லும் கரிகாலனின் உயிரை காப்பாற்ற கார்த்தி படும் பாடு என விறுவிறுப்பாக நகர்கிறது இரண்டாம் பாகம்.

இரண்டாம் பாகத்தில் அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார் மணிரத்னம். ஆனாலும் ஆதித்த கரிகாலன் – நந்தினி இருவருமே படம் முழுவதும் ஆட்சி கொள்கிறார்கள். இவர்கள் சிறப்பான நடிப்பால் நம்மையும் திரையரங்குகளையும் ஆட்கொள்கிறார்கள். என்னதான் தன் வஞ்சத்தை தீர்க்கும் ஒரு பெண்ணாக இருந்தாலும் தன் தாய் யார் என்று தெரிந்த பின்னர் கல்லுக்குளும் ஈரம் இருக்கு என்று தன் கண்ணீர் மூலம் புரிய வைக்கிறார்.

மிகவும் ஆவேசம் நிறந்த அரசனாக ஆதித்த கரிகாலன் படம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் விக்ரம். விக்ரமின் நடிப்பை சொல்ல ஒரு காட்சி போதும் குறிப்பாக ஜஸ்வர்யா ராய் பச்சனை கடம்பூர் மாளிகையில் சந்தித்து பேசும் அந்த ஒரு காட்சி போதும்.

என்னதான் திரை முழுவதையும் கரிகாலனும் – நந்தினியும் ஆட்கொண்டாலும் தன் சிறப்பான நடிப்பார் நானும் இருக்கிறேன் என்று முத்திரை பதிக்கிறார் வந்திய தேவன் கார்த்தி. ஒரு விஸ்வாசமான உண்மையான வீரன் இப்படித்தான் இருப்பான் என்று தன் நடிப்பால் நமக்கு வெளிக்காட்டியுள்ளார் கார்த்தி. வந்திய தேவனை குந்தவை சந்திக்கும் காட்சி மணிரத்னம் அவர்களின் கைவன்னம். அந்த காட்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை வசனம் யாராக இருந்தாலும் அவர்களை காதல் வலைக்குள் விழ வைத்துவிடும்.

பொன்னியின் செல்வன் என்றால் ஜெயம் ரவி அவருக்கு இதில் பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்பது சற்று வருத்தம். இருந்தாலும் பெருந்தன்மை கொண்ட அருண்மொழி வர்மன் இப்படத்தான் இருந்திருப்பார் என்ற அந்த மதிப்பு குறையாமல் நடித்திருக்கிறார். சுமார் 14 வருடம் கழித்தே அருண்மொழி வர்மன் சோழ சாம்ராஜ்ஜித்தின் அரசனாக முடிசூடிக்கொண்டார் என்பது அருண்மொழி வர்மனின் பெருந்தன்மைக்கு ஒரு உதாரணம். அந்த நடிப்பு ஜெயம் ரவியின் நடிப்பில் மிகவும் இயல்பாக வருகிறது.

அரசியலும் அழகிலும் வசீரிக்கிறார் இளவரசி குந்தவை என்ற பேரழகியாக வரும் த்ரிஷா. உண்மையாகவே குந்தவை இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று வியக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

படத்தில் வரும் மற்ற கதாப்பாத்திரங்கள் சுந்தர சோழர், பெரிய பழுவேட்டையர், சிறிய பழுவேட்டையர், மதுராந்தகத் தேவர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளார், ஆழ்வார்க்கனியான், ரவிதாசன், பூங்குழலி, வானதி, செம்பியன் மாதேவி ஆகியோர் சற்று நேரமே திரையில் வந்தாலும் அனைத்து கதாப்பாத்திரங்களும் மிகவும் முக்கியமானவை.

ரவி வர்மன் ஒளிப்பதிவு பிரம்மாண்ட படத்தை மேலும் பிரம்மாண்டமாக்கிவிடுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை பின்னணி இசை இரண்டிலும் மிரட்டியிருக்கிறார். பொன்னியின் செல்வன் நாவலில் இடம் பெறாத கிளைமாக்ஸ் காட்சியை படத்திற்காக எடுத்தது ஏன் என்று புரியவே இல்லை இறுதி வரைக்கும் நமக்கு.

இனி இது போன்ற சரித்த கதைகள் பல வெளியாகும் தமிழ் சினிமாவில் அதற்க்கு எல்லாம் ஒரு அடித்தளமாக இந்த பொன்னியின் செல்வன் படத்தை மிகச் சிறந்த ஆரம்பமாக கொடுத்திருக்கிறார் சரித்திர இயக்குநர் மணிரத்னம்.
Ponniyin Selvan Review By CineTime

[wp-review id=”45938″]