News
நான் அரசியலுக்கு வருவது உறுதி – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
31 ஆம் தேதியான இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டினை தன் ரசிகர்கள் முன் அறிவித்தார். கடந்த 5 நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வந்தார். கடைசி நாளான இன்று அவர் தென் சென்னை ரசிகர்களை சந்தித்தார். அரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டினை இன்று அறிவிப்பதாக சொல்லியிருந்த நிலையில், அவர் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அது காலத்தின் கட்டாயம் என்றும் அறிவித்துள்ளார். அடுத்த தேர்தலுக்குள் அரசியலுக்கு தேவையான கட்டமைப்புகளை வடிவமைத்த பிறகு கட்சி பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும், 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார்.
விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,
” கடமையை செய் பலனை நான் பார்த்துகொள்கிறேன் என்று மஹாபாரதத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு சொல்கிறார். யுத்தம் செய் ஜெயித்தால் நாடாளுவாய், தோற்றால் வீர சொர்க்கம். யுத்தம் செய்யாமல் சென்றால் உன்னை கோழை என்று சொல்வார்கள். நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கான காலம் குறைவாக இருப்பதால்,அடுத்து வரும் சட்ட மன்ற தேர்தலில் நான் தனிக் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து நிற்பேன். அதுக்கு முன்னால் வருகிற பாரளுமன்ற தேர்தல் சமயத்தில் நான் முடிவெடுப்பேன். நான் அரசியலுக்கு பெயர், புகழ், பணம் சம்பாதிக்க வரவில்லை. அதெல்லாம் நான் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவில் ஆயிரம் மடங்கு தமிழக மக்களாகிய நீங்கள் எனக்கு தந்துள்ளீர்கள். பதவியின் மேலும் ஆசை இல்லை, அப்படியிருந்திருந்தால் 1996 களிலேயே அந்த நாற்காலி என்னை தேடி வந்தது ஆனால் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை 68 வயதில் எனக்கு பதவி ஆசை வருமா ? நான் ஆன்மிகவாதியன்று சொல்ல தகுதியற்றவனா ? அப்படியெனில் நான் அரசியலுக்கு வரக் காரணம் என்ன ?
நாட்டில் அரசியல் மிகவும் கெட்டுவிட்டது. ஜனநாயகம் சீர் கெட்டுவிட்டது. கடந்த ஒர் ஆண்டில் தமிழ் நாட்டில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் ஒவ்வொரு தமிழ் மக்களையும் தலை குனிய வைத்தது. எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நான் இந்த முடிவை எடுக்கவில்லையெனில் என்னை வாழவைத்த தமிழ் தெய்வங்களுக்கு ஜனநாயக முறையில் நல்லது செய்ய ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னை சாகும் வரை துரத்தும்.
அரசியல் மாற்றத்திற்கான நேரம் இது. சிஸ்டம் மாற்றப் பட வேண்டும். உண்மையான, வெளிப்படையான சாதி, மதச் சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வரவேண்டும் என்பதே என் நோக்கம் விருப்பம். அது என் போன்ற தனி ஒருவனால் முடியாது. மக்களாகிய உங்களின் ஆதரவு தேவை. தேர்தலில் ஜெயிப்பது எளிதான விஷயமல்ல, நடுக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது. ஆண்டவனாகிய அவன் அருளும், மக்களின் நம்பிக்கையை பெற்றால் மட்டுமே அது சாத்தியம். இது இரண்டுமே எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
பழைய காலத்தில் ராஜாக்கள் அன்னிய நாட்டினரை கொள்ளை அடிப்பார்கள் ஆனால் இங்கு சொந்த நாட்டில் சொந்த மக்களையே கொள்ளை அடிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும், கட்சியின் அடிப்படையிலேயே இம்மாற்றத்தை கொண்டு வரவேண்டும். கட்சியில் ஆனி வேர் தொண்டர்கள் தான். அவர்கள் இல்லாமல் முதலமைச்சரே இல்லை. எனக்கு தொண்டர்கள் வேண்டாம் காவலர்கள் வேண்டும். பொது நலத்திற்கு பாடுபடும், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள தப்பு செய்தால் தட்டிக் கேட்கும் காவலர்கள் தான் எனக்கு வேண்டும். தகுந்த வேலைக்கு தகுதியுள்ள ஆட்களை நியமித்து வேலை சரியாக நடக்கிறதா என்பதை மேற்பார்வையிடும் சாதரண பிரஜை, மக்களின் பிரதிநிதி தான் நான்.” என்று அவர் கூறினார்.