News

நான் இங்கு எனக்கு விளம்பரம் தேடிக் கொள்ள வரவில்லை

Published

on

2014ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, சத்யார்த்தி என்ற அமைப்பை தொடங்கி இந்தியா முழுக்க குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கடத்தலை தடுக்க  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பாரத் யாத்ரா என்ற ஒரு யாத்திரையை தொடங்கியுள்ளார். செப்டம்பர் 11ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு யாத்திரை டெல்லியில் முடிகிறது. 35 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு குழந்தை கடத்தல் மற்றும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான உறுதிமொழியை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் கைலாஷ் சத்யார்த்தி.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ஒவ்வொரு நாளும், செய்திகளில் குழந்தைகள் பற்றிய செய்திகளை காண்கிறோம். நம் வீடுகள் கூட பாதுகாப்பானதாக இல்லை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமானவர்களாலும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுகிறார்கள். பெண் குழந்தைகள் மட்டுமல்லாமல் ஆண் குழந்தைகள் கூட பாதிக்கப்படுகிறார்கள். அதை பற்றி குழந்தைகள் வீட்டில் சொல்ல பயப்படுகிறார்கள். இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து செல்ல தான் இந்த பாரத் யாத்ரா தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒரு குழந்தை ஆபத்தில் இருந்தால், இந்தியாவே ஆபத்தில் இருப்பதாக அர்த்தம். பள்ளி மற்றும் பொது இடங்களுக்கு அனுப்பும்போதும் உங்கள் குழந்தைகளின் மீது கவனத்தோடு இருங்கள். நான் என்னால் முடிந்ததை செய்வேன், நீங்களும் செய்யுங்கள்.

நான் இங்கு எனக்கு விளம்பரம் தேடிக் கொள்ள வரவில்லை. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரங்கும் மனம் மிகவும் உயர்ந்தது. நாளை உங்கள் குழந்தைக்கும் கூட இது நடக்கலாம், பாதிக்கப்பட்ட குழந்தைகளை உங்கள் குழந்தைகளாக நினைத்து இந்த யாத்திரையில் பங்கு கொள்ளுங்கள். சமூக வலைத்தளங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. எனவே அங்கு இதை பற்றி பேசுங்கள். குழந்தைகள் இல்லாமல் உலகம் இல்லை.

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை மதுரை, பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர் வழியாக டெல்லியில் முடிவடைகிறது. அதை தொடர்ந்து காஷ்மீரில் கூட இந்த யாத்திரையை நடத்த இருக்கிறோம். காஷ்மீரில் குழந்தைகளை வன்முறைக்கு ஆயுதமாகவும், கவசமாகவும் உபயோகிக்கிறார்கள். அதை தடுக்க வேண்டும். இதற்கு முன்பு குழந்தைகளின் கல்விக்காக சிக்‌ஷா யாத்ரா, குழந்தை தொழிலாளர்களுக்காக 1999ல் குளோபல் மார்ச் ஆகியவற்றை நடத்தியிருக்கிறேன்.

இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 8 குழந்தைகள் காணாமல் போகிறார்கள். இதை தடுக்க கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் 50 சதவிகித குழந்தைகள் அவர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. இந்த யாத்ராவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர்,  பல்வேறு மாநில முதலமைச்சர்கள், நீதிபதிகள், தலைவர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள்” என்றார்.

Trending

Exit mobile version