News

மகளே பாடலை தாய்மார்களுக்கு காணிக்கையாக்கிய கௌதமி

Published

on

காதம்பரி பிக்சர்ஸ்” தயாரிப்பில் நடிகை கௌதமி நடித்திருக்கும் “மகளே” வீடியோ பாடல் இன்று வெளியிடப்பட்டது. மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து பெண்களையும் பெருமை படுத்தும் விதமாக அமைந்திருக்கும் இப்பாடலை பாடலாசிரியர் அறிவுமதி எழுதியிருக்கிறார்.

இந்தப் பாடலை வெளியிட்டு நடிகை கௌதமி பேசியதாவது,

“முதலில் அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துகள். இந்த அருமையான நாளில், அனைத்து தாய்மார்களுக்குமான காணிக்கையாக “மகளே” என்கிற இந்த வீடியோ பாடலை வெளியிடுவதில் எனக்கு பெருமகிழ்ச்சி. அதுமட்டுமல்லாமல், அனைத்து பெண்களுக்குமே முன்மாதிரியாக, நம்பிக்கையாக விளங்கிய அம்மாவின் ஆசியுடன் இப்பாடலை வெளியிடுவது தான் சரியானதாக இருக்கும் என்பதனால் இங்கு வந்திருக்கிறேன்.

மேலும், நிஜ வாழ்விலும் நாங்கள் பெண்களுக்கான தேவைகள் குறித்தும்.. அவர்கள் முன்னேற்றத்திற்குத் தேவையானவற்றைக் கடந்த இரண்டு வருடங்களாக ஆராய்ந்து வருகிறோம். அதற்காகவே எங்களது “தி லைஃப் அகைன் ஃபௌண்டேசன்” வாயிலாக களப் பணியாற்றி வருகிறோம். தனியொரு மனிதனால் இங்கு எதுவுமே சாத்தியமில்லை, எனவே தான் எங்கள்  தி லைஃப் அகைன் நிறுவனத்தில் பலரும் கைகோர்த்து ஒன்றாக நிற்கிறோம். உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும், வாழ்த்துகளையும், ஆசியையும் எதிர்பார்க்கிறோம். இன்றிலிருந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக எங்கள் நிறுவனம் முன்னின்ரு செயல்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்”, என்று பேசினார்.

பின்னர், தமிழகத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது,

“நடப்பவை எல்லாம் கேள்விப்படும் போது மிகவும் வேதனையாக இருக்கிறேன். இன்னும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. யார் மீதும் பழி போட்டு காலம் கடத்தாமல் நாம் ஒவ்வொருவரும் பாதுகாப்பாளராய் விளங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பினை உணர வேண்டும்” என்றார்.

ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? என்ற கேள்விக்கு,

“நிச்சயமாக தமிழக அரசியலில் ஜெயலலிதா அவர்கள் இல்லாமல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அவரின் இடம் யாராலும் நிரப்ப முடியாதது. அவர் ஒரு தனிப்பெரும் தலைவர், மிகப் பெரிய ஆளுமை”, என்று பதில் கூறினார்.

கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது,

“இருவருமே கடினமாக உழைத்து தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் இருக்கிற உயரம் அவர்களுக்கு ஒரே இரவில் கிடைத்து விடவில்லை. அதுபோல தான் அரசியலும், இங்கும் அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரே இரவில் எதுவும் மாறிவிடாது”, என பதிலளித்தார்

Trending

Exit mobile version