News
“ஓ மை கடவுளே” ரசிகர்கள் கொண்டாடுவார்கள் – அசோக் செல்வன் !

இளமை ததும்பும் காதல், இளைஞர்களின் நவீன வாழ்வியல் என அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில், டிரெய்லரிலேயே பரபரப்பை கிளப்பியிருக்கிறது “ஓ மை கடவுளே” படம். டிரெய்லர் வெளியான குறுகிய காலத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை YouTube தளத்தில் கடந்து, பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், பிப்ரவரி 14 படம் வெளியாகவுள்ளது.
படம் குறித்து நடிகர் அசோக் செல்வன் கூறியதாவது…
உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இத்தனை பெரிய வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இக்கதை திரைக்கதை மீது மிகப்பெரும் நம்பிக்கை இருந்தது. எங்கள் திரை வடிவம் அனைவரையும் கவரும் என்று நம்பினோம் ஆனால் ரசிகர்களின் இத்தகைய பிரமாண்ட வரவேற்பு எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டது. “ஓ மை கடவுளே” படத்தில் கதையின் பின்னிருக்கும் ரகசியம், கொஞ்சமேனும் மாற்றி, வித்தியாசமாக யோசிக்கலாமே எனும் சிறு பொறி தான். நாம் கண்டிப்பாக பல காதல் கதைகளை கடந்து வந்திருக்கிறோம் ஆனால் இதில் கொஞ்சம் ஃபேண்டஸியும் கலந்திருக்கிறது. அது மற்றிலும் புதிதாக இருக்கும். இயக்குநர் அஷ்வத் உடனான எனது நட்பு, பல்லாண்டு கால வரலாறு கொண்டது. நாளைய இயக்குநரில் குறும்படங்கள் இயக்கிய காலத்தில் இருந்து, எங்கள் நட்பு தொடர்ந்து வந்திருக்கிறது. அப்போதே இருவரும் படம் செய்வதாக உறுதிபூண்டிருந்தோம். எனது சகோதரி அபிநயா செல்வம் தான் இந்தப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தார். தயாரிப்பாளர் டில்லிபாபு சார் தந்த ஆதரவுக்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் போதாது. “ராட்சசன்” போன்ற மிகப்பெரிய வெற்றிப்படத்திற்கு பிறகு எங்களின் இந்த சின்ன படத்தின் மீது நம்பிக்கை வைத்து, உருவாக்க ஒப்புக்கொண்டார். அவரது தயாரிப்பு படத்திற்கு பெரும் பலமாக மாறியிருக்கிறது.
இப்படத்தில் நாயகி கதாப்பாத்திரம் மிகவும் முக்கியமானது. ரித்திகா சிங் செய்தால் நன்றாக இருக்குமென நினைத்தோம். ஆனால் அவர் தேர்ந்தெடுத்து வெகு சில படங்களே செய்துகொண்டிருந்தார். அவர் ஒப்புக்கொள்வரா ? என ஒரு சிறு தயக்கம் இருந்தது. ஆனால் கதை கேட்டதும் அவருக்கு பிடித்திருந்தது. படமே அவரை சுற்றி தான் நடக்கும். ரித்திகா மிக நட்பாக இருந்தார். அது நடிக்கும் போது எனக்கு பேருதவியாக இருந்தது. படத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன். வாணி போஜனுக்கு ஒரு முக்கியமான ரோல். அவருக்கு இது தமிழில் முதல் படம் நன்றாக செய்துள்ளார். எல்லோருடைய கிரஷ்ஷாக அவர் மாறிவிடுவார்.
விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் குறித்து கூறியபோது…
படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு ரசிகர்களிடம் எளிதாக சென்றடையும் பிரபல ஆளுமை தேவைப்பட்டது. விஜய் சேதுபதி அண்ணாவிடம் கேட்டோம். அவர் என் சகோதரர் போல்தான். ஆரம்பம் முதலே நான் நன்றாக இருக்கவேண்டுமென உண்மையாக விரும்பும் நபர் அவர். கதாப்பாத்திரம் குறித்து ஏதுமே கேட்கமால் ‘நடிக்கிறேன் என்ன செய்யனும் சொல்’ என்றார். அவருக்கு பெரிய மனது. எளிமையா வந்து நடித்து கொடுத்துவிட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் சக்திகள் கொண்ட நபராக நடிக்கிறார். அவருக்கு உதவியாளராக ரமேஷ் திலக் வருகிறார். அவரது பாத்திரம் ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும். இதை தவிர இப்போதைக்கு படம் பற்றி ஏதும் சொல்லமுடியாது. படத்தில் அந்த சுவாரஸ்யங்களை நீங்களே கண்டுகளியுங்கள். இந்தப்படம் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் கொண்டாட்டமானதாக இருக்கும் என்பது உறுதி என்றார்.