Connect with us
 

News

காத்ரீன் இரு வேறு லுக்கில் மிரட்டும் அருவம்

Published

on


Trident Arts ரவீந்திரன் வழங்கும் சித்தார்த் நடிக்கும் “அருவம்”. புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த், காத்ரீன் தெரசா நடிப்பில் கமர்ஷியல் ஹாரர் டிராமாவாக உருவாகியுள்ளது “அருவம்”. எஸ் எஸ் தமன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவின் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசியது …

சித்தார்த்துடன் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. அவருடன் நடிப்பது எப்போதும் மகிழ்ச்சியானது. எப்போதும் படங்களில் காதலிக்கும் பையானாக இருப்பார். இந்தப்படத்தில் ஒரு மிடுக்கான ஆண்மகனாக நடித்துள்ளார். காத்ரீன் என் மேல் கோபமாக இருப்பார் ஏனெனில் அவரை கயிறு கட்டி நிறையகாட்சிகளில் தூக்கி, தொங்க விட்டு சண்டைக்காட்சிகள் எடுத்தோம். ஆனால் முடிவில் படம் பார்த்து பிறகு நிறைய பாராட்டினார். படம் நன்றாக வந்திருக்கிறது வாழ்த்துங்கள் என்றார்.

சதீஷ் பேசியது…

இந்தப்படம் பேய்ப்படம் என்று சொன்னார்கள் ஆனால் எனக்கு பேயுடன் ஒரு காட்சிகூட இல்லை. அடுத்த பாகத்தில் வருமென நினைக்கிறேன். சித்தார்த் எப்போதும் அதிரடியான ஒருவர் நல்ல நண்பர். அவருடன் என் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. காத்ரீனுடன் எனக்கு இரண்டாவது படம். கலகலப்பு 2 வில் தங்கையாக நடித்தார். எனக்கு ஜோடியாகத்தான் சுந்தர் சி யிடம் கேட்டேன் ஆனால் தரவில்லை. இந்தப்படத்தில் கூட அவருடன் அதிக காட்சிகள் இல்லை. ரவீந்திரன் மிக நல்ல தயாரிப்பாளர். படமும் நன்றாக வந்துள்ளது. பாருங்கள் வாழ்த்துங்கள் என்றார்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசியது…

இந்தப்படம் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம். கிளைமாக்ஸ் வரும் ஒரு ஆக்சன் காட்சிக்கு ஒரு கோடி செலவு செய்துள்ளார் தயாரிப்பாளர் பிரமாண்டமாக வந்துள்ளது. சித்தார்த் எப்போதும் டெக்னிக்கலாக அப்டேட்டாக இருப்பார். நாம் புதிதாக என்ன செய்தாலும் பாராட்டுவார். காத்ரீன் இரு வேறு லுக்கில் வருவார். படம் நீங்கள் எதிர்பார்த்த்தை விட அதிக திருப்தி அளிக்கும் படைப்பாக இருக்கும் என்றார்.

இயக்குநர் சாய்சேகர் பேசியது…

நான் ரவீந்தரன் சாருக்கு படம் செய்தது புண்ணியம் என நினைக்கிறேன். சித்தார்த் இயல்பிலேயே இந்தக் கேரக்டருக்கு பொருந்திப்போகக் கூடியவர். நிஜத்தில் சுத்தத்தை போற்றக்கூடியவர் உயிர்களை நேசிப்பவர். அவர் தான் இந்தப்படத்திற்கு வேண்டும் என்று நினைத்து அவருக்காகவே எழுதினோம். அருவம் என்பது உருவம் இல்லாத ஒன்று. கதையில் அதற்கான காரணம் இருக்கும். ஏகாம்பரம் மிக சுறுசுறுப்பானவர். தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பானது. காத்ரீன் தெரசாவை நிறைய கஷ்டப்படுத்தியிருக்கிறோம் ஆனால் அவர் தன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து உழைத்துள்ளார். பின்னணி இசையில் அற்புதம் செய்துள்ளார் தமன். கிளைமாக்ஸ் காட்சியாக வரும் இரவுக்காட்சியை பகலில் எடுத்திருக்கிறோம். மிகப்பிரமாண்டமானாதாக இருக்கும். ஏகாம்பரம் விஷுவலாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். படம் நன்றாக வந்திருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

காத்ரீன் தெரசா பேசியது….

அருவம் படத்தின் கதையை கேட்டபோது முதலில் எனக்குப் பிடித்தது அந்தப்படத்தில் இருந்த பெண் பாத்திரத்திற்கான முக்கியத்துவம் தான். பல படங்களில் இது இருப்பதில்லை. மிக வித்தியாசமாக அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த கேரக்டர் எழுதப்பட்டிருந்தது. ஜோதி எனும் கேரக்டரை செய்வதில் உள்ள சாவால்களை விரும்பி ஏற்றேன். சித்தார்த் உடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அவர் சீரியஸானவர் என நினத்தேன் ஆனால் அவர் ஜாலியாக இருந்தார். இயக்குநர் இந்தப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். நாங்கள் அனைவரும் எங்கள் உழைப்பை தந்திருக்கிறோம். இரண்டே பாடல்கள் தான் ஆனால் நன்றாக வந்துள்ளது நீங்கள் கேட்டிருப்பீர்கள். மிக விரைவில் படம் வெளியாகிறது உங்களை எல்லாம் சந்தோஷப்படுத்தும் படமாக இருக்கும் என்றார்.

சித்தார்த் பேசியது….

ரவி சார் போன் செய்து கமர்ஷியல் படம் இருக்கு கேட்கீறீங்களா என்றார். நான் எப்போதும் ரொம்பவும் தேர்ந்தெடுத்து தான் படம் செய்வதாக சொல்கிறார்கள். ஆனால் நான் எந்தப்படத்தையும் எல்லோரும் பார்க்க வேண்டும் என்று தான் செய்கிறேன். இப்படத்தில் நம் உணவில் கலப்படம் பரவுவதை சொல்லும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு கதை இருந்தது. எனது கேரக்டர் சமூகத்தின் மீது கோபம் உள்ள கேரக்டர் எனக்கு உண்மையில் பொருந்தி போகக்கூடியது. அதற்காகத்தான் இந்தப்படம் செய்தேன். சில்வாவையும் ஏகாம்பரத்தையும் பல காலமாக தெரியும் தம்பி, தம்பி என என்னை பெண்டெடுத்துவிட்டார்கள். படத்தின் விஷிவலுக்காகத்தான் இத்தனை உழைப்பும். காத்ரீனுக்கு இந்தப்படத்தில் மிகவும் கனமான கேரக்டர். எப்போதும் ஹீரோவுக்கு இணையாக ஹீரோயினுக்கு பாத்திரம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன் அப்படி இருந்தால் படம் நன்றாக இருக்கும் இந்தப்படத்தில் அது சரியாக அமைந்துள்ளது. சதீஷை காமெடியனாகத்தான் எல்லோரும் நினைக்கிறோம் ஆனால் அவருக்குள் ஒரு அற்புதமான குணச்சித்திர நடிகர் உள்ளார். அதை இந்தப்படத்தில் பார்க்கலாம் . நிறைய உழைத்திருக்கிறோம். எல்லோருக்கும் பிடிக்கும்படி படம் இருக்கும் என்றார்.

டிரெயலர் ஸ்னீக்பீக் காட்சிகள் வரவேற்பு பெற்ற நிலையில் படம் வரும் அக்டோபர் 11ம் தேதி வெளியாகிறது.