News
தனது கட்சி துவக்க தேதியை அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். அதன்பிறகு கடந்த பிப்ரவரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் முதலமைச்சராக மாட்டேன் எனவும், நல்லவர் ஒருவரை முதல்வராக்குவேன் எனவும் தெரிவித்தார். ஆனால், ரஜினிகாந்த்தான் முதல்வராக வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தினர்.
சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், ரஜினி கட்சி ஆரம்பிப்பதும் தள்ளிப்போனது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், கொரோனா காலத்தில் மருத்துவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்துவதாக ரஜினி பெயரில் கடிதம் வெளியானது. அந்த அறிக்கையை மறுத்த ரஜினி, அதில் உள்ள மருத்துவர் ஆலோசனை சம்பந்தப்பட்ட வரிகள் மட்டும் உண்மைதான் என்று தெரிவித்தார். இதனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது.
இதனிடையே மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ஆம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தான் என்ன முடிவு எடுத்தாலும் பின்னால் நிற்பதாக நிர்வாகிகள் தெரிவித்தாகவும், தன்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என அவர் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது
இந்த நிலையில் அரசியல் கட்சி தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 3) முற்றுப் புள்ளிவைத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த், “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இணைக்கப்பட்ட அறிக்கையில், “வருகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்..அதிசயம் நிகழும்” என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்பதை ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார்