News
என் படங்கள் எல்லாமே ஓ.டி.டி தளத்துக்குத்தான் சூர்யா அதிரடி அறிவிப்பு !

தமிம்நாட்டில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் ஓடிடியிலேயே வெளியாகி வருகின்றன. முதலில் ஓடிடி-யில் படம் வெளியாவதற்கு பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து பல படங்கள் ஓடிடி-யில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவான படங்கள் அடுத்தடுத்து அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. இதில் சூர்யா, ஜோதிகா தனித்தனியே நடித்த படங்களும் அடக்கம். அதாவது அமேசான் ப்ரைம் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தின் படி 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படம் வருகிற செப்டம்பர் மாதம் ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தை அரிசில் மூர்த்தி இயக்கி உள்ளார். பாடகர் கிரிஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சசிகுமார் – ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள ‘உடன்பிறப்பே’ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது. கத்துக்குட்டி படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் சூரி, சமுத்திரக்கனி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது. கூட்டத்தில் ஒருவன் படத்தின் இயக்குனர் ஞானவேல் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
அருண் விஜய், விஜய்குமார், அர்னவ் விஜய் ஆகியோர் நடித்துள்ள படம் ‘ஓ மை டாக்’. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தை சரோவ் சண்முகம் இயக்கி உள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.