News
சார்லி 777 என் வாழ்கையில் பல விஷயங்களை மாற்றியது – நடிகர் ரக்ஷித் ஷெட்டி !
இயக்குநர் கிரண்ராஜ் K இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள திரைப்படம் ‘777 சார்லி’
சார்லி’ என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமே 777 சார்லி. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தின் நடிகர் ரக்ஷித் ஷெட்டி கூறியதாவது:-
இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமான சிறப்பான படைப்பு . சார்லி 777 என் வாழ்கையில் பல விஷயங்களை மாற்றியது. 1 1/2 வருடத்திற்கு முன்னரே படம் முடிந்துவிட்டது. நான் இந்த படத்தை தயாரித்துள்ளேன், அதனால் எனக்கு படம் ஒடிடிக்கு அனுப்பலாமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது. நான் படத்தை முழுமையாக பார்த்தபிறகு, என்ன நடந்தாலும் படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன். படத்தை பார்த்த பிறகு கிடைக்கும் அனுபவம் விலைமதிப்பற்றது. எல்லா படங்களும் பான் இந்தியா படங்கள் இல்லை என எங்களுக்கு தெரியும். ஆனால் பான் இந்தியா படமாக மாற முழு அம்சமும் இந்த படத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் முதலில் இணைந்த நிறுவனம் ஸ்டோன் பெஞ்ச். ஸ்டோன் பெஞ்ச் எப்பொழுதும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும். அவர்களுடன் இணைந்தது மகிழ்ச்சி, ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தாருங்கள் நன்றி.
777 சார்லியை ரக்ஷித் ஷெட்டி மற்றும் ஜி எஸ் குப்தா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை தமிழில் இயக்குநர், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜும், தெலுங்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டக்குபதியும், மலையாளத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான பிருத்விராஜ் சுகுமாரனும் வழங்குகிறார்கள்.
மைசூர், பெங்களூரு, சிக்மங்களூர், கோவா, பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் 777 சார்லி படமாக்கப்பட்டுள்ளது. ராஜ் பி ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை நோபின் பால் அமைத்துள்ளார். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவையும், படத்தொகுப்பை பிரதீக் ஷெட்டியும் கையாண்டுள்ளனர்.
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 777 சார்லி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.