News
அருண் வைத்தியநாதன் தயாரித்து இயக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம் !
பிரசன்னா-சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடிப்பில் நிபுணன், மோகன்லால் நடித்த பெருச்சாழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும், சீதக்காதி இணை தயாரிப்பாளருமான அருண் வைத்தியநாதன், அவரது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்தும், குழந்தைகளின் மனதில் வைத்தும் எடுக்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
படத்தைப் பற்றி அருண் வைத்தியநாதன் கூறுகையில், “குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் தமிழ் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டை காட்சிகள் போன்றவை இடம் பெறும். அவ்வாறாக இல்லாமல், குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளுக்காக, குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்கிற முயற்சி தான் இந்த படம். குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும் இது அனைத்து வயதினரையும் கவரும்,” என்றார்.
அன்புக்கொரு பஞ்சமில்லை என்பதே படத்தின் சாராம்சம் என்று அருண் வைத்தியநாதன் மேலும் கூறினார்.
“கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் தான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளாரகள். OTT தளங்களிலும் கூட குழந்தைகளை கவரும் வகையில் படங்கள் வரவில்லை. இந்தப் படத்தின் கதையை நான் கொரோனாவுக்கு முன்னரே எழுதி விட்டாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட உள்ளோம். நான்கு குழந்தைகள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இதன் கதை சென்னையில் நடைபெற்றாலும், உலகத்தில் உள்ள எந்த குழந்தையும் இதை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். தயாரிப்பு ரீதியாகவும் படத்தின் குழுவிலும் நிறைய புதுமைகளை புகுத்த உள்ளோம்,” என்று அருண் கூறினார்.
இந்த படத்தை தனது சொந்த நிறுவனமான யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் அருண் வைத்தியநாதன் தயாரிக்கிறார்.