Connect with us
 

Reviews

தங்கலான் – விமர்சனம் !

Published

on

Cast: Chiyaan Vikram, Malavika Mohanan, Parvathy
Production: Studio Green & Neelam Productions
Director: Pa.Ranjith
Screenplay: Pa.Ranjith
Cinematography
Editing: Selva R K
Music: G.V.Prakash Kumar
Language: Tamil
Runtime: 2H 36Mins
Release Date: 15 August 2024

நடிகர் சியான் விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர். இன்று அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது உலகம் முழுதும் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

வேப்பூரில் கிராம மக்கள் தங்களுக்கென இருக்கும் சொந்த நிலத்தில் பயிற் செய்து வருகிறார்கள். இது பிடிக்காத ஜமீன்தார் அவர்களின் பயிர்களுக்கு தீ வைக்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு அம்மக்கள் கட்ட வேண்டிய வரியை தான் கட்டிவிடுவதாகவும் பதிலுக்கு கிராம மக்கள் அனைவரும் தங்கள் நிலத்தை கொடுத்து அதில் பண்ணைக்கு வேலையாட்களாக வர வேண்டும் என்று கூறுகிறார். 

ஜமீன்தார்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைபெற ஆங்கிலேயர்களுக்கு தங்கத்தை கண்டுபிடிக்க முடிவு செய்கிறான் தங்கலான். தங்கலான் தங்கத்தை கண்டுபிடித்தானா? தங்கம் அவன் மக்களுக்கு அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையைப் பெற்று தந்ததா? என்பதே கதை.

மஞ்சள் பிசாசு என்று அழைக்கப்படும் தங்கத்தை எடுக்க அப்பகுதியில் வாழ்ந்த பட்டியலின மக்கள் பலியான வரலாற்றையும் இதே மக்கள் அந்நிலத்தின் பூர்வ குடிகளாக வாழ்ந்த வரலாற்றையும் நாட்டார் கதைசொல்லல் வழியாக இணைக்கும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித்.

ஜமீன்தார்களின் அடக்குமுறையில் வேப்பூர் மக்கள் தங்கள் நிலத்தை இழந்து நிற்பதும் அவர்களிடம் இருந்து விடுதலை பெற ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்வதும் முதல் பாகமாகவும், அதே ஆங்கிலேயர்கள் தங்களை அடிமைப்படுத்த நினைக்கையில் அவர்களை எதிர்த்து தங்கள் நிலத்திற்காக போராடுவது இரண்டாம் பாகமாக தொடர்கிறது.

தங்கலானின் முப்பாட்டனான காடையன் சோழர்களுக்கு தங்கத்தை எடுக்க உதவி செய்கிறான். அப்போது தங்கத்தை பாதுகாக்கும் நாகர்களின் தலைவியான ஆரத்தியை தங்கலான் கொன்றுவிட அவளது ரத்தம் படரும் இடமெல்லாம் தங்கமாக மாறுகிறது. நிகழ்காலத்தில் இதேபோல்  ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்யும் தங்கலானின் கண்களுக்கு மட்டும் ஆரத்தி தெரிகிறாள். ஆரத்தி  தங்கலான் ஆகிய இரு கதாபாத்திரங்கள் வழியாக வரலாற்றை இணைக்க முயற்சித்துள்ளார் ரஞ்சித். 

தங்கத்தை தேடி அலையும் போது ஏற்படும் மர்மமான சவால்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை நிறைய இடங்களில் நினைவுபடுத்துகிறது. வாய்மொழிக் கதைகளில் வருவது போல் நிறைய இடங்கள் மேஜிக்கல் ரியலிஸம் பாணியில் சொல்லப்பட்டிருப்பது ஒரு சிறப்பான முயற்சி.

புத்தர் நாட்டார் கதைகளின் வழி முனியாக வருவது , சைவம் வைணவத்தின் ஆதிக்கத்தை சுருக்கமாகவும் ஒரு விதமான நகைச்சுவையுடனும் சொல்லிச் செல்கிறார்கள்.

தங்கலான் மற்றும் கங்கம்மா இடையில் இருக்கும் காதல் காட்சிகள். வெள்ளைக்காரர் கொடுத்த துணியை போட்டுக்கொண்டு ஜாங்கோ படத்தில் வருவது போல் தங்கலான் குதிரையில் வருவது. பெண்கள் அனைவரும் முதல் முறையாக ரவிக்கை அணியும் காட்சிகள் பா ரஞ்சித் இப்படத்தில் வைத்திருக்கும் ஸ்பெஷல் மொமண்ட்ஸ்.

வழக்கமான கமர்ஷியல் சினிமாவைப் போன்ற திரைக்கதை அமைப்பு இல்லை என்றாலும் தங்கலான் படம் காட்டும் மக்களும் அவர்களின் வாழ்க்கை முறையும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக காட்டப்பட்டிருக்கின்றன. நிகழ்காலமும் கடந்த காலமும் சேர்ந்து நடக்கும் பகுதிகள் ஆரம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரு பிரம்மாண்டமான அனுபவமாக திரள்கிறது.

ஜி.வி பிரகாஷின்  பின்னணி இசை போர் முரசைப்போல் ஒவ்வொரு காட்சியையும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டே இருக்கிறது

இனிமேல் இப்படி ஒரு நடிப்பைப் பார்ப்போமா என்கிற அளவிற்கு சியான் விக்ரமின் நடிப்பு இருக்கிறது. தனது குடும்பத்துடன் இருக்கும் போது கூன் விழுந்த தோற்றத்துடன் இருக்கும் விக்ரம்  சண்டைக்காட்சிகளில் போர் வீரன் போல் மாறுகிறார். பார்வதி திருவொத்து , மாளவிகா மோகனன் , பசுபதி , ஹரி கிருஷ்ணன் என ஒவ்வொரு நடிகரும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தங்கத்தை கண்டுபிடிக்கும் பயணம் சுவாரஸ்யமானதாக இருந்தாலும் கதையின் மையமான வரலாறு வசனங்கள் வழியாகவும் , தங்கலானின் கனவுகள் வழியாக மட்டும் சொல்லப்படுவதால் ஜெனரல் ஆடியன்ஸூக்கு படம் சொல்ல வருவது முழுமையாக ஜெனரல் ஆடியன்ஸூக்கு புரியாமல் போகலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக ரசிகர்களுக்கு ஒன்று நிச்சயம் புரியும். நிலமோ தங்கமோ ,  அதிகாரம் கொண்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பை சுரண்டி அவர்களை அடிமையாக மட்டுமே வைக்க நினைப்பார்கள். அதை எதிர்த்து தங்கலான் என்கிற ஒருவன் தன் மக்களின் விடுதலைக்காக போராடிய வரலாற்றை தங்கலான் படம் உணர்வுப் பூர்வமாக சொல்கிறது.

Rating [4/5]