Connect with us
 

News

சினிமாதான் என் உயிர் கோப்ரா இசைவெளியிட்டு விழாவில் விக்ரம் உருக்கமான பேச்சு !

Published

on

சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் Cobra படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ்சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சீயான் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன் இதயத்தில் சின்னதாக ஒரு அசௌகரியமான உணர்வு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பி விட்டேன். அதற்குள் சமூக வலைதள பக்கத்தில் விரும்பத்தகாத விசயங்கள் நடந்தன. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் எனக்கு நெருக்கமானவர்கள் பலர் பதறி அடித்து விசாரித்தார்கள். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். இதற்காகவே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள் அவர்களின் ஆதரவும், ஆசியும் இருக்கும் வரை எனக்கு எதுவும் நடைபெறாது. எனக்கு 20 வயதில் விபத்து ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதன் போது காலை அகற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது, மன உறுதியுடன் போராடி, அதிலிருந்து மீண்டிருக்கிறேன். அதனால் தற்போது நடந்தவை எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.

நான் எப்போதும் சினிமாவுக்காக தான் இருக்கிறேன். சினிமா மட்டும் தான் என் உயிர். வேறு எதுவும் எனக்குத் தெரியாது. பல ஆண்டுகளுக்கு முன் ‘சோழா டீ’ என்ற ஒரு விளம்பரத்தில் நடித்தேன். அதில் நான் ஒரு சோழராஜனாக நடித்தேன். அதற்கு திலீப் என்று ஒரு இளைஞன் இசையமைத்தார். ஆனால் இன்று அதே ஆதித்ய கரிகாலனாக, மிகப்பெரும் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கிறேன். அப்போது திலீப்பாக இருந்தவர், தற்போது ஏ ஆர் ரகுமானாக மாறி இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இருக்கிறார்.

நானும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறேன். சில தருணங்களில் நானும் ஆஸ்கார் விருதைப் பெறவேண்டும் என்று நினைத்திருக்கிறேன் இதற்கு காரணம் ஏ . ஆர். ரஹ்மான் சார் தான். இங்கிருந்து பணியாற்றினாலும் ஆஸ்காரை வெல்லலாம் என நிரூபித்தவர். இதன் மூலம் நமக்குள் ஒரு கனவு இருந்தால். ஒரு லட்சியம் இருந்தால் அதற்காக கடினமாக உழைத்தால். யாராக இருந்தாலும் மிகப் பெரிய உயரத்தை எட்ட முடியும். நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவிற்கான எல்லையைத் தொட முடியும். இதற்கு ஏ ஆர் ரகுமான் சிறந்த உதாரணம். இவர் இந்திய நாட்டின் பெருமை. வாழும் சகாப்தம். லிவிங் லெஜன்ட். அவருடைய இசைக்கு அனைவரையும் போல் நானும் ஒரு ரசிகன். அவர் ‘கோப்ரா’ படத்தில் தன்னுடைய பங்களிப்பை வழங்கியதற்காக, அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் சிக்கலான காட்சி அமைப்புகள், நுட்பமான கதாபாத்திர உணர்வுகள், இதனை ஏ ஆர் ரகுமான் அவர்களை தவிர வேறு யாராலும் இசையால் நிறைவடைய செய்ய இயலாது என இயக்குநர் அஜய் ஒவ்வொரு முறையும் என்னிடம் ரகுமானை பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்.