News
ஆயிரத்தில் ஒருவனை ரசிகர்கள் கொண்டாடி இருந்தால் இன்று 4 பாகங்கள் வெளியாகியிருக்கும் – செல்வராகவன் !
ரசிகர்கள் கொண்டாடி இருந்தால் ஆயிரத்தல் ஒருவன் திரைப்படம் இன்று வரையில் 4 பாகங்கள் வெளிவந்திருக்கும் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
கார்த்தி, பார்த்திபன். ரீமாசென், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர்களுக்கும் – பாண்டியர்களுக்கும் உள்ள பகையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து இப்போதுதான் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்காக வேலைகளில் செல்வராகவன் இறங்கியுள்ளார்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பார்த்திபன் நடித்த கதாப்பாத்திரத்தில் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்த நிலையில்தான் நானே வருவேன் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக பேட்டி அளித்துள்ள செல்வராகவனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதாவது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான போது ரசிகர்கள் கொண்டாடவில்லை. ஆனால் தற்போது கொண்டாட ஆரம்பித்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு படைப்பாளியாக உங்களுக்கு என்ன தோன்றுகிறது எனற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த செல்வராகவன் ஒரு படைப்புக்காக சரியான அங்கீகாரம் கிடைக்காதபோது நிச்சயமாக நமக்கு அது வருத்தத்தை கொடுக்கும். அதே மன நிலைதான் எனக்கும் இருந்தது. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படம் வந்தபோது ரசிகர்கள் அதை கொண்டாடி இருந்தால் இன்று நிச்சயமாக ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள் என சென்றிருக்கும் என தெரிவித்தார்.