வட தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் ஊருக்கு வெளியில் வாழும் இருளர் பழங்குடி மக்களைச் சேர்ந்த ராசாகண்ணு (மணிகண்டன்) திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்படுகிறார். வழக்கை விரைவில் முடித்துவிட வேண்டும் என்ற அழுத்தத்தால், அப்பகுதி காவல்துறையினர் ராசாகண்ணு குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார். அவருடன் அவரது சமூகத்தைச் சேர்ந்த மற்ற இருவரும் கைது செய்யப்படுகின்றனர். காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த மூவரும் தப்பி ஓடிவிட்டதாக காவல்துறையினர் ராசாகண்ணுவின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவிக்கின்றனர்.
பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த மூவரும் காணவில்லை என்பதால், தன் கணவர் ராசாகண்ணுவை மீட்டுத் தருமாறு சென்னையில் உள்ள மனித உரிமைகள் ஆர்வலரும் வழக்கறிஞருமான சந்துருவைச் (சூர்யா) சென்று சந்திக்கிறார் செங்கேணி (லிஜோமோல் ஜோஸ்). சந்துரு இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அரசின் சாதியவாத கோர முகம் அம்பலப்படுகிறது. ராசாகண்ணுவும், அவரது நண்பர்களும் என்ன ஆனார்கள், செங்கேணி நீதிமன்றத்தின் மூலம் வென்றாரா என்பதை மீதிக்கதையில் பேசியிருக்கிறது `ஜெய் பீம்
சந்துருவாக சூர்யா மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக முழக்கமிடும் போது காட்டும் எழும் கம்பீரம், லாக்கப்பின் பழங்குடிப் பெண்ணுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமை குறித்து கேட்டவும் எழும் அறச்சீற்றம், நீதிமன்றங்களில் நிதானம் தவறாமல் நிகழ்த்தப்படும் உரையாடல்கள், வழக்கிற்காக செங்கேணியுடன் பயணத்தில் தன்னைத் `தோழன்’ என முன்னிறுத்தும் பண்பு, இறுதியில் ராசாகண்ணுவின் மகளுடன் அமர்ந்து செய்தித்தாள் படிக்கும் காட்சியில் எழும் மகிழ்வான உணர்வு என சூர்யாவின் நடிப்பிலும், தயாரிப்பிலும் மற்றொரு மைல்கல்லாக `ஜெய் பீம்’ அமைவதற்கு வாய்ப்புகள் ஏராளம்.
செங்கேணியாக நடித்துள்ள லிஜோமோல் ஜோஸ் முழுப் படத்தையும் தாங்கி நடித்துள்ளார். கணவனுடனான காதல், கணவனைக் காவல்துறையினரிடம் இருந்து மீட்க முடியாத கையறுநிலை, மகளைத் தூக்கிச் செல்லும் காவலர்களிடம் காட்ட முடியாத சினம், காவல்துறை உயரதிகாரியிடம் எழும் சுயமரியாதை என லிஜோமோலுக்கு விருதுகள் குவிக்கும் படமாகவும் `ஜெய் பீம்’ இருக்கும். சிறிய வேடம் என்றாலும் ரஜிஷா விஜயனின் அறிவொளி இயக்க ஆசிரியர் வேடம் அவருக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
இயக்குநர் டி.ஜே.ஞானவேல் தமிழ் சினிமாவில் இதுவரை பெரிதும் பேசப்படாத பழங்குடிகள் மீதான சமூக வன்முறை, அரசு வன்முறை ஆகியவற்றை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் பேசியிருக்கும் வகையிலும், சாதியின் மீதான நேர்மையான விமர்சனமாக `ஜெய் பீம்’ படத்தை முன்வைத்திருக்கிறார். தொண்ணூறுகளின் வட தமிழகத்தையும், சென்னையையும் அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு அற்புதம்.
படத்தின் இறுதியில் உண்மை சம்பவங்களை தொகுத்து வழங்கியிருப்பது படத்திற்கும் , நீதியரசர் திரு சந்துரு அவர்களுக்கும் சிறப்பு செய்துள்ளது. நீதியரசர் சந்துரு அவர்களின் பணி காலம் கடந்து போற்றத்தக்கது.
ஜெய் பீம் இந்த தலைப்பை விட பொருத்தமான தலைப்பை இந்த படத்திற்கு யோசிக்க முடியாது
Cinetimee
கதையின் விமர்சனம் தாண்டி இயக்குனருக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள் முந்தைய படத்திற்கு பிறகு தனது இரண்டாவது படமாக இதை தேர்வு செய்து அதுவும் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்படி ஒரு படத்தை எடுக்க முனைந்து இருப்பது அதுவும் முழுக்க முழுக்க டாகுமெண்ட்ரியாக தோன்ற கூடிய கதையை சினிமாவுக்கே உரித்தான பாணியில் தன் சொல்ல வந்த கருத்தை நச்சென்று பார்வையாளர்களுக்கு கடத்தி விடுகிறார்.
படத்தின் பெரிய பிளஸ் அனல் தெறிக்கும் வசனங்கள்
படத்தின் டைட்டில் ஆரம்பிப்பதற்கு முன்னமே சாட்டை சுழற்றி அடிக்க ஆரம்பித்துள்ளார் இயக்குனர்.
நீ என்ன சாதி என்ற கேள்வி கேட்டு படம் துவங்கும் இடமே மனத்தை உறுத்துகிறது.இப்பலாம் யார் சாதி பார்க்கிறார்கள் என்ற கேள்வியை மீண்டும் நமக்குள்ளயே கேட்க வைத்துள்ளது ஜெய் பீம் படம்.
சட்டம் வலிமையான ஆயுதம், யாரைக் காப்பாத்துறதுக்காக அதைப் பயன்படுத்துறோம்ங்கிறது முக்கியம்”,
ஒரு ஆள் மேல ஒரு கேஸ் தான் போடணும்னு சட்டம் இருக்கா என்ன? தலைக்கு ரெண்டு கேஸைப் போட்டு விடுங்க
ஒரு உண்மையை ஒத்துக்கிறாங்கன்னா பல உண்மைகளை மறைக்கிறாங்கன்னு அர்த்தம்
தப்பு பண்றவங்களுக்கு பதவி, பணம், சாதின்னு நிறைய இருக்கு ஆனால் பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதானே இருக்கோம்
என பல இடங்களில் வசனங்கள் சிந்திக்கவும் , சுவாரஸ்யமாகவும் உள்ளன.
படம் யாருடைய கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது நிஜ வாழ்க்கை குடும்பத்திடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இல்லையெனில், திரையில் பெரிதாக்கப்படும் இந்த வலிமிகுந்த நினைவுகள் உயிர் பிழைத்தவர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிடும்.