News
கே ஜி எஃப் 2 பத்திரிக்கையாளர் சந்திப்பு – தமிழில் பேசி அசத்திய ராக்கி பாய் யஷ் !
ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.
‘கே ஜி எஃப் 2’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்று அதில் தமிழில் பேசிய நடிகர் யஷ் :- மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னுடைய நண்பர் விஷால் மூலம் கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டோம். அதற்கு ஆதரவு அளித்ததற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடும் உழைப்பாளிகள். சண்டைப்பயிற்சி இயக்குநர் அன்பறிவு இதற்கு சிறந்த உதாரணம். சண்டைக் காட்சிகளின் போது ஒவ்வொரு ஷாட்டிலும் மிகுந்த அக்கறையுடன் பாதுகாப்பு அம்சங்களை ஒன்றுக்கு பல முறை ஆய்வு செய்து பிறகு நடிகர்களை அக்காட்சியில் நடிக்க வைப்பார். அவரது இந்த அணுகுமுறை அவருடைய தொழில் மீது அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பை உணர்த்தியது. இதற்காக நான் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய கடின உழைப்பிற்கு, படத்தின் முதல் பாகத்தில் பணியாற்றியதற்காக அன்பறிவு மாஸ்டருக்கு தேசிய விருது கிடைத்தது.
வசனகர்த்தா அசோக் கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் கூடுதலாக உழைத்திருக்கிறார். சாதரணமாக இது ஒரு டப்பிங் படம் என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் கேஜிஎப்பைப் பொருத்தவரை ஒவ்வொரு மொழிக்குரிய முக்கியத்துவத்தை அளித்திருக்கிறோம். ஏனெனில் மொழி என்பது மதிப்புமிக்கது அதற்குரிய மரியாதை தரவேண்டும். ஒட்டு மொத்த படக்குழுவினரும் அதற்கான மரியாதையை வழங்கியிருக்கிறோம். ஒவ்வொரு மொழிக்கேற்ற வகையில், அதன் நேட்டிவிட்டி மாறாமல் வசனங்களை எழுதியிருக்கிறார்கள். இதற்காக வசனகர்த்தாவிற்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேகர் என்ற கலைஞர் எனக்காக தமிழில் பின்னணி பேசி இருக்கிறார் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல் பாகத்திலேயே நான் தமிழில் பின்னணி பேச முயற்சித்தேன். ஆனால் முழுமையான தன்னம்பிக்கை இல்லாததால் பேசவில்லை. இனி வரும் படங்களில் தமிழில் பின்னணி பேச முயற்சிக்கிறேன்.