News

லியோ நடனக் கலைஞர்களுக்கு ஊதியம் தரவில்லையா? ஃபெப்சி விளக்கம் !

Published

on

லியோ திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் 2,000 நடன கலைஞர்களை வைத்து பாடல் எடுக்க இயக்குநர் திரு.லோகேஷ் கனகராஜ் விருப்பப்படுவதாக அந்த பாடலுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்த நடன இயக்குநர் திரு.தினேஷ் மாஸ்டர் அவர்கள் தெரிவித்தார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (FEFSI) இணைந்துள்ள தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அதிகபட்சமாக 600 கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். ஏனெனில், அதிகபட்சமாக 1,000 பேர் உறுப்பினராக உள்ள சங்கத்தில் பல்வேறு படங்களில் ஏறக்குறைய 400 கலைஞர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் 600 நடன கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். இதுபோன்று அதிகமான நடன கலைஞர்கள் தேவைப்படும்போது முன் வரிசைகளில் நடன கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களையும், உறுப்பினர் அல்லாத ஓரளவுக்கு நடனம் தெரிந்த அல்லது அழகான தோற்றம் உள்ள ஆண்கள் / பெண்களை பின் வரிசையில் நிற்க வைத்தும் படமாக்குவது வழக்கம். இவர்கள் ரிச் பாய்ஸ் / ரிச் கேர்ள்ஸ் என்றோ மாடல்ஸ் என்றோ உறுப்பினர் அல்லாதவர் என்றோ அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு வழக்கமாக 3 வேளை உணவளித்து கன்வேயன்ஸ் (Conveyance) உட்பட 1,000/- ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.

இந்த “லியோ” திரைப்படத்தில் 1,400 உறுப்பினர்கள்

அல்லாதவர்கள் சென்னை பனையூரில் உள்ள “ஆதி ஸ்ரீராம்” ஸ்டுடியோசில் கடந்த ஜீன் மாதம் 06.06.2023 முதல் 11.06.2023 வரை 6 நாட்கள் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. இவர்களுக்கு, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்ட போது ஊதியம் + பேட்டா கன்வேயன்ஸ் உட்பட ஒரு உறுப்பினருக்கு நாளொன்றுக்கு ரூ.1,750/- வீதம் 6 நாட்களுக்கு ரூ.10,500/- ரூபாய் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக 94,60,500/- ரூபாய் மொத்தம் செலுத்தப்பட்டது. அது மட்டுமின்றி இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்குப்படுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்திற்கு (TANTTNNIS) தனியாக வழங்கப்பட்டது.

தற்போது, ஒரு சிலர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பேட்டியளித்ததை கண்டோம். இது தவறான செய்தியாகும். தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் தலா ரூ.10,500/- வீதம் (மொத்தம் 6 நாட்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

Trending

Exit mobile version