ஜடி ஊழியர்களான இரண்டு நண்பர்கள் ரியோ மற்றும் பால சரவணன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் சென்னையில். இவர்கள் பணி புரியும் தங்கள் அலுவலகம் சார்ப்பில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். அதில் சினிமா நடிகை ஒருவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்து வருகிறார்கள். அந்த நடிகைக்கு கொடுக்க வேண்டிய 5 லட்சம் பணத்தை பால சரவணன் வீட்டில் வைத்திருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க பாலசரவணன் தங்கை காதலனுடன் வீட்டை விட்டு ஓடி போகிறார். ஓடி போகும் போது அலுவலகத்தில் அந்த நடிகைக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தையும் எடுத்து செல்கிறார். இதன் பின்னர் காணாமல் போன தங்கையும் பணத்தையும் இவர்கள் பிளான் பண்ணி எப்படி கண்டுபிடித்தார்கள்? அவர்கள் தேடி போகும் போது அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகள் என்ன அங்கு நடக்கும் காமெடி ட்விஸ்களும்தான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகன் என்று சொல்லாமல் இப்படத்தின் கதையின் நாயகனாக வரும் ரியோ ராஜாவுக்கு இது ஹீரோவாக இரண்டாவது படம். இப்படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக சிறப்பாகவே எந்த ஒரு குறைவில்லாமல் செய்திருக்கிறார்.காமெடி படம் என்றால் அதில் போய் நாம் லாஜிக்யெல்லாம் தேட கூடாது. படத்தில் சீரியஸான காட்சிகள் என்று ஒன்றுமே இல்லை. அதனால் காமெடி அனைத்தும் ரசிக்கும் விதமாகவே நடித்துள்ளார் ரியோ ராஜ்.
படத்தின் நாயகியாக வரும் ரம்யா நம்பீசன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வழக்கமான நாயகி கதை இல்லாமல் இவரை வைத்துதான் படமே நகரும். இவர் படத்தில் எடுக்கும் முடிவுகள் கதையை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்கிறது.
படத்தில் காமெடிக்கு பால சரவணன், ரோபோ சங்கர், டைகர் கார்டன் தங்கத்துரை இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், முனீஸ்காந்த் என ஒரு காமெடி பட்டாளத்தையே இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இறக்கியுள்ளார். அவை அனைத்தும் படத்திற்கு தேவையான அளவு காமெடியை கொடுத்துள்ளது.
மிகவும் விறுவிறுப்புடனும் ஒரு டிராவல் கதையோடு ஆரம்பமாகும் முதல் பாதி ரசிக்கும் விதமான காமெடிகளுடன் நம்மை அழைத்து செல்கிறது.
Cinetimee
பாலசரவணனின் தங்கையாக வரும் பூர்ணிமா ரவி மிக நீளமான வசனத்தை அழகாக பேசி மிரட்டியுள்ளார். அப்பாவி பணக்கார மாப்பிள்ளையாக சித்தார்த் விபின் நாயகியின் அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன் அம்மாவாக வரும் ரேகா நாயகின் அம்மாவாக வரும் விஜி சந்திரசேகர் அப்பாவாக சந்தானபாரதி வில்லனாக வரும் மாரிமுத்து என படத்தில் நடிகர் மற்றும் நடிகைகளை குவித்துள்ளார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.
வில்லனாக வரும் மாரிமுத்து படத்தின் முடிவில் என்ன ஆனது என்று தெரியவில்லை அதையும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். ரம்யா நம்பீசனின் கதாப்பாத்திரம் கண்டிப்பாக பெண்களுக்கு ஒரு பலத்தை கொடுக்கும் விதமாக இருந்தது.
ஒரு முழு நீள காமெடி படத்தை கொடுக்க வேண்டும் என நினைத்து அதை கையில் எடுத்துக்கொண்ட இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் அதை ஓரளவு சரியாக செய்து வெற்றி பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு சில இடங்களில் பிழைகள் இருந்தாலும் கண்டிப்பாக ஒரு முறை சென்று உங்களின் குடும்பத்துடன் ரசிக்க கூடிய ஒரு திரைப்படம். முதல் பாதியில் கொடுத்த சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் இரண்டாம் பாதியில் கொடுத்திருந்தால் இதை விட இன்னும் ரசித்திருக்கலாம்.
படத்தின் இசையமைப்பாளர் யுவன் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதமாக உள்ளது. படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் இவரின் பிண்ணனி இசை மற்றும் படத்தின் ஒளிப்பதிவு அதை பார்க்கும் போது கண்களுக்கு ஒரு உயிர் வருகிறது அந்த அளவு அழகாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் ராஜசேகர்.