News
தனக்கு கிடைக்கும் கேரக்டரை எந்த வித குறையும் இல்லாமல் நிறைவாகச் செய்யும் ஒரு திறமையான நடிகர் பிரசன்னா !
ஒரு சிலரின் கேரியரை திரும்பி பார்க்கும் போது இவரிடம் எல்லாம் இருந்தும், இவருக்கு என் பெரிய பிரேக் கிடைக்கவில்லை என்று கேள்வி வரும். அது போலான ஒரு நடிகர் தான் பிரசன்னா. 2002-ல் பைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமான பிரசன்னாவுக்கு இது 22வது வருடம். ஹீரோ, வில்லன், கேரக்டர் ஆர்டிஸ்ட் என எல்லா வேடங்களிலும் நடித்து விட்டார். ஆளும் ஸ்மார்ட். திறமைக்கும் பஞ்சமில்லை. ஆனாலும் இத்தனை வருடங்களில் பெரிய வெற்றி என்பது இவருக்கு கிடைக்கவே இல்லை.
திருச்சிக்காரர் தான். இஞ்சினியரிங் முடித்து, சினிமாவுக்காக முயன்று சுகி கணேசனின் இயக்கத்தில் முதல் படமே மணிரத்னம் தயாரிப்பில் நடித்து வெளிச்சம் பெற்றார். அப்போது 20 வயது தான். பிரகாஷ்ராஜின் தயாரிப்பில் ராதாமோகனின் இயக்கத்தில் வெளிவந்த “அழகிய தீயே” மிகவும் பிடித்த படம். மிக மிக இயல்பாக, இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றே தெரியாதவண்ணம் நடித்திருப்பார் பிரசன்னா. அதுதான் அவரின் ப்ளஸ்பாயிண்ட். ஒரு இயக்குனராக ஒவ்வொரு காட்சியாக பிரகாஷ்ராஜிடம் விவரிக்கும் போதும், அதற்கு பிரகாஷ்ராஜ் கொடுக்கும் எக்ஸ்பிரஷனும் பிரமாதமாக இருக்கும். “விழிகளின் அருகினில் வானம்” மாண்டேஜ் பாடல் காட்சியும், அதில் வரும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களும், அட்டகாசமாக செய்திருப்பார். காட்சி வடிவில் பார்ப்பதற்கும் மிக மிக பிடித்த பாடல்.
மலையாளத்தின் முக்கிய இயக்குனர் லோகிததாஸ் இயக்கத்தில் “கஸ்தூரிமான்” படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் நடித்த “கண்ட நால் முதல்” கிருஷ்ணா கேரக்டர் எப்போதும் மனதுக்கு பிடித்தது. நம்ம வீட்டுப் பையன் போல், நமது தோள் மேல் கை போட்டு பேசும் நண்பன் போல அத்தனை இயல்பாக இருப்பார் அந்தப் படத்தில். ஆல்டைம் பேவரைட் மூவி. அதன் பிறகு அவருக்கு கிடைத்த லைப் டைம் வேடம் தான் “அஞ்சாதே”. அப்படி ஒரு வில்லன் கேரக்டரில் நடிக்க ஒரு ஹீரோ முன்வருவாரா என்பதே சந்தேகம். ஆனாலும் ஒரு இயக்குனரின் நடிகராக பிரசன்னாவின் அந்த கேரக்டர் தனிதன்மையுடன் இருந்தது. அதன்பிறகு அவரது படங்கள் பெரிய ஹிட் இல்லையென்றாலும் கவனம் பெற்றவை தான். நாணயம் இன்னொரு முக்கியமான, வித்தியாசமான படம். “பானா காத்தாடி” யில் லோக்கல்.ரவுடி வேடம்.
ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்ற கண்டிஷன் இல்லாமல் தனது திறமையை வெளிகாட்டக்கூடிய சிறிய வேடமாக இருந்தாலும் அதில் நடிப்பது பிரசன்னாவின் ஸ்டைல். அவர் நடித்த படங்களின் லிஸ்டை பார்த்தாலே நமக்கு தெரிகிறது. பெரும்பாலான படங்களை நாம் பார்த்திருப்போம். அனைத்துமே பெரிய வெற்றிப் படங்கள் இல்லையென்றாலும், நமது கவனம் ஈர்த்த படங்கள்.
சென்னையில் ஒரு நாள், புலிவால், முரண், திருட்டுப் பயலே படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். “கல்யாண சமையல் சாதம்” வித்தியாசமான படம். ப.பாண்டி, துப்பறிவாளன் இரண்டுமே அவர் பேர் சொல்லும் படங்கள் தான். சமீபத்தில் “ரனீதி” எனும் இந்தி சீரியலில் “அபிநந்தன்” கேரக்டராக நடித்திருந்தார்.
நடிகை ஸ்நேகாவை காதலித்து திருமணம் செய்து ரசிகர்களின் இதயங்களை நொறுக்கினார். சினிமாவில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், தனிப்பட்ட வாழ்வில் அவருக்கு ஜாக்பாட்டாக ஸ்நேகா கிடைத்தார். ரசிகர்கள் விரும்பும் அழகான ஜோடி.