News
தமிழகத்தில் 550 திரையரங்குகளில் வெளியாகும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் !
மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே திரு டிவிவி தானய்யா தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் திரு ராஜமௌலி இயக்கத்தில், திரு ராம் சரண் மற்றும் திரு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தை நாளை (மார்ச் 25-ஆம் தேதி) தமிழ்நாட்டில் 550 அரங்குகளில் திரு சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது.
தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. பிரமாண்ட படங்கள் மூலம் தனக்கென தனியிடம் பிடித்துள்ள லைக்கா, இத்திரைப்படத்தையும் தனக்கே உரிய பாணியில் மிகப்பெரிய முறையில் வெளியிடுகிறது.
தமிழகத்தில் மட்டும் இப்படம் 550 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைக்கவுள்ளது. மொழி பெயர்க்கப்பட்ட ஒரு படத்தை இத்தனை திரையரங்குகளில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இது திரு ராஜமௌலியின் முந்தைய வெளியீடான பாகுபலியை விட 150 திரையரங்குகள் அதிகமாகும்.
படத்தில் திரு ராம் சரண் திரு அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த திரு சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.
திரு ஜூனியர் என்டிஆர் திரு கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். திரு கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே ‘ஆர்ஆர்ஆர் ‘ படத்தின் மையக்கரு என்று இயக்குநர் திரு ராஜமௌலி கூறியுள்ளார்.
திரு ராம் சரணின் காதலி சீதாவாக செல்வி ஆலியா பட் நடித்துள்ளார். இதை தவிர திருமிகு ஒளிவியா மோரிஸ், திரு அஜய் தேவ்கன், திரு சமுத்திரக்கனி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.திரு ராஜமௌலி இயக்கத்தில், திரு டிவிவி தானய்யா தயாரிப்பில், திரு ராம் சரண் மற்றும் திரு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை திரு சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் நாளை தமிழ்நாட்டில் 550 திரையரங்குகளில் வெளியிடுகிறது.