News
சிம்பு சார் அவர் போன் செய்து என்னை வாழ்த்தினார் – அஷ்வின் குமார் !
Trident Arts நிறுவன தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் நாயகனாக நடிக்கும், A.ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், “என்ன சொல்ல போகிறாய்”. இன்றைய தலைமுறை இளைஞர்களை அசத்த, மனம் வருடும் காதல் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்றது.
முதலில் படத்தின் பாடல்களை கலைகுழுவினர் மேடையில் ரசிகர்கள் ஆராவாரத்துடன் அரங்கேற்றினர். இதனை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வில் நாயகன் அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் பேசியதாவது:- இறைவனுக்கு நன்றி அப்புறம் உங்களுக்கு நன்றி. உங்கள் அன்பால் தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்பு தான் என்னை வளர்த்துள்ளது. நான் கனவு கண்டிருக்கிறேன் ஆனால் இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை உங்கள் அன்பால் தான் இது சாத்தியமாகியிருக்கிறது.
எனது முதல் படம் இன்று இசை விழா நடப்பது மகிழ்ச்சி. நானும் உங்கள் இடத்தில் இருந்து வந்திருக்கிறேன் என் இடத்தில் இருந்து பார்த்தால் தான் உங்கள் அன்பு புரியும். என்ன சொல்லப் போகிறாய் படத்திற்கு முன், பின் என என் வாழ்க்கையை பிரிக்கலாம். விஜய் டீவி என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் தந்திருக்கிறது, அவர்களுக்கு நன்றி.
ஒரு காமெடி ஷோ இவ்வளவு பெரிய பிரபலம் தருமா என நினைத்து கூட பார்க்கவில்லை. உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப்படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்கள் வாழ்வில் நல்ல நண்பன் இருந்தால் உங்கள் வாழ்வு கண்டிப்பாக சிறப்பாக இருக்கும். ரவி சார் யாராயிருந்தாலும் அவர் ஆபீஸில் சாப்பாடு போடுவார் அவர் ஆபீஸில் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். நல்ல மனிதர் அவர், முதலில் அவர் சொன்ன கதையை செய்ய மாட்டேன் என சொல்லி விட்டேன்.
பெரிய நிறுவனத்தை மறுத்து விட்டோம் என வருத்தமாக இருந்தது. நீங்கள் என் மேல் அன்பு வைத்து என்னை பார்க்க வருகிறீர்கள் உங்களை ஏமாற்றக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். நான் கதை கேட்கும்போது நல்லாயில்லனா தூங்கி விடுவேன். 40 கதைக்கும் மேல் நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்ன சொல்ல போகிறாய் தான்.
ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் அட்டகாசமான இசையை தந்திருக்கிறார்கள். நாயகிகள் இருவருமே மிகுந்த நட்புடன் நடித்து தந்தார்கள். படம் பார்க்க பிரமாண்டமாக வந்திருக்கிறது. புகழ் இந்தப்படத்தில் அழகாக இருக்கிறார். எனக்கு சினிமாவில் ரெண்டு பேரை பிடிக்கும் சூப்பர் ஸ்டார். அப்புறம் சிம்பு சார்.
அவர் போன் செய்து என்னை வாழ்த்தினார் அவருக்கு நன்றி. சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய இன்ஷ்பிரேஷானாக இருந்திருக்கிறார். அவரை நினைத்து தான் என் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்திருக்கிறேன். என்ன சொல்லப் போகிறாய் படத்தை நீங்கள் பார்த்து கொண்டாடுவதை காண ஆவலாக இருக்கிறேன். இந்தப்படம் பல பேரின் கனவு கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்புகிறேன் நன்றி.