Reviews
Kodiyil Oruvan – Movie Review
Cast: Vijay Antony, Aathmika, Ramachandra Raju, Prabhakar, Shankar Krishnamurthy
Production: Infiniti Film Ventures
Chendur Film International
Director: Ananda Krishnan
Music: Nivas K. Prasanna
Language: Tamil
Censor : U/A
Runtime: 2 Hour 32 Mins
Release Date: 17 Sep 2021
தன்னுடைய தாயின் சபதத்தை காப்பாற்றி கலெக்டர் ஆக நினைக்கும் ஒருவன், எளிய மக்களுக்கு கோடியில் ஒருவனாக எப்படி மாறுகிறான் என்பது கதை. இந்திய ஆட்சிப் பணிக்கான ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்று, கலெக்டர் ஆகி, எளிய, விளிம்பு நிலை மக்களுக்கு உதவ நினைக்கிறார் விஜட் ஆண்டனி.
அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 10 முதல் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை சமூகத்தில் கௌரவமான இடம் நோக்கி முன்னேற்றிவிட வேண்டும் என்றும் லட்சியத்தோடு கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார். பிந்தங்கிய பகுதிக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பள்ளியிலிருந்து ‘இடை நிற்றல்’ ஆகி பிறகு குற்ற நடவடிக்கைகளுக்கு அவர்களைப் பயன்படுத்த நினைக்கும் சமூக விரோதிகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவது அவரது முதல் சவாலாக இருக்கிறது.
அவர்களுக்கு ட்யூஷன் எடுக்கிறார். ஐஏஎஸ் தேர்வுக்கும் படிக்கிறார். ஆனால், அவர் வசிக்கும் குடிசை மாற்று வாரியப் பகுதியின் கவுண்சிலரும் அவரது அடியாட்களும் விஜய் ஆண்டனியின் செயல் திட்டத்துக்குக் குறுக்க வருகிறார்கள். அப்போதெல்லாம் அடியை வாங்கிகொண்டு பொறுமையாக இருக்கும் விஜய் ஆண்டனி, இறுதியில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்று டெல்லியில் நடக்கவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளச் செல்கிறார். அப்போது கவுன்சிலர் வில்லனும் அவருடைய ஆட்களும் விஜய் ஆண்டனியை கணக்கை நிரந்தரமாக பைசல் செய்துவிடும் முடிவுடன் அவரை நெருங்க..அப்போது நாயகன் என்ன செய்தார்…இறுதி நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு கலெக்டர் ஆனாரா இல்லையா என்பது மீதிப் படம்.
‘பிச்சைக்காரன்’ படத்தில் விஜய் ஆண்டணிக்கு அம்மா செண்டிமெண்ட் அட்டகாசமாகப் பொருந்துவதால், மறுபடியும் அம்மா செண்டிமெண்டை ஒரு இழையாக வைத்துகொண்டு, ஆக்ஷன் மற்றும் சமூகத்துக்கு செய்தி சொல்லி சமுக விரோதிகளுக்கு பாடம் கற்பிக்கும் ஒரு கதைக் களத்தை கையில் எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அவரது அப்பாவி மற்றும் சமூகம் கட்டமைத்துள்ள ஜெண்டில்மேன் தோற்றத்துக்கும் இந்தக் கதையும் கதாபாத்திரம் நன்றாகவே பொருந்தியுள்ளது. ஆனால், இரண்டாம் பாதிப் படத்தின் திரைக்கதை சமீபத்தில் வெளியான படங்களைப் போலவே பெரும் சொதப்பலாக திக்குத் தெரியாமல் அலைவது இந்தப் படத்திலும் சாபமாகியிருக்கிறது.
விஜய் ஆண்டனியின் கதாபாத்திரத்தை அவரது இயல்புக்கு ஏற்ப முதல் பாதிக்கு நன்றாகவே எழுதியுள்ள இயக்குநர், இரண்டாம் பாதிக்கு கோட்டை விட்டுவிட்டார். விஜய் ஆண்டணி, முதல் பாதியில் அமைதி, இரண்டாம்பாதியில் சூராவளி என சுழன்றடிக்கிறார். அமைதி ஓகே.. புயல்.. பலவீனமான புழுதிப் புயலாக மாறிவிடுவதுதான் அவரது ஆக்ஷன் வேடத்துக்கு பின்னடைவாகிவிடுகிறது. தன்முன்னால் சமூக விரோதச் செயல்கள் நடந்தால் அதை தன்னுடைய பொறுமை மற்றும் அன்பு மூலம் ஆரம்பத்தில் மாற்ற முயற்சிக்கிறார். குறிப்பாக அவர் குடியேறி வாழும் விளிம்பு மக்கள் வசிக்கும் பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் நல்லபெயர் வாங்கும் அவரை புரட்டியெடுக்கிறார்கள்.
ஆனால், அடியை வாங்கிக்கொண்டு பொறுமையாக இருக்கிறார். அப்போது அவரிடம் ட்யூசன் படிக்கும் இளைஞன் ஒருவன் ‘என்ன சார் உங்களுக்கு கோபமே வராதா.. ஒருத்தன் அடிச்சா திருப்பி அடிக்க மாட்டீங்களா?’ என்று கேட்கிறான். அதற்கு ‘உங்க நோக்கத்தை நோக்கிப் போகும்போது பல தடைகள் வரும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தாண்டி போயிட்டே இருக்கணும். அப்பத்தான் உங்க இலக்கை அடைய முடியும்’ என்று உதட்டில் ரத்தம் வழிய மென்மையான குரலில் சொல்லும்போதே.. அய்யய்யோ.. இந்த ஆள் வில்லன்களை புரட்டியெடுக்கப்போகிறார் என்று எதிர்பார்க்க வைத்துவிடுகிறார்கள். எதிர்பார்த்தது போலவே பாரதியின் கவிதை, வீர வசனம் என்று விஜய் ஆண்டணி பேசும்போது திரையரங்கில் கெக்கே பிக்கே என்று ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அவருக்கு சுத்தமாக வீரவேசம் எடுபடவில்லை.
ஒன்றுக்கு மூன்று வில்லன்கள். சூரஜ் பாப்ஸ் என்றொரு புதிய வில்லனைக் கூட்டி வந்திருக்கிறார்கள். அவர், அஜித், விஜய், ரஜினி படங்கள் உட்பட மோஸ்ட் வான்டட் தமிழ் பட வில்லனாக ஆகும் தகுதிகள் அனைத்தும் அவருக்கு இருக்கின்றன. விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்திருக்கும் மலையாள நடிகையான திவ்ய பிரபா, நடிப்பில் பிண்ணியிருக்கிறார். கதாநாயகி ஆத்மிக அழகாக இருக்கிறார். விஜய் ஆண்டனி படங்களில் கதாநாயகிக்கு இடமிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அவர் பிரசெண்ட் போடுவதோடு சரி.
ஒரு தாயின் சபதம், மிஸ்டர் பாரத் உட்பட அம்மாவின் கனவை நிறைவேற்றும் கடந்த காலத்தில் காலாவதியான கதையை விஜய் ஆண்டனிக்கு ஏற்ப ‘ஒயிட் வாஷ்’ செய்யும் முயற்சியில் கால்வாசிக் கிணறு தாண்டியிருக்கிறார் இயக்குநர் அனந்த கிருஷ்ண். விஜய் ஆண்டணியின் பிரசன்ஸ், ஆத்மிகாவின் அழகு, வில்லன் சுரஜ்ஜின் மிரட்டல், திவ்ய பிரபாவின் நடிப்பு ஆகியவற்றுக்காக வேண்டுமானல் நேரம் அமையும்போது பார்க்கலாம்.
மொத்தத்தில் ‘கோடியில் ஒருவன்’ அடித்து பிடித்து கொண்டு திரையரங்கில் சென்று பார்க்கும் படம் அல்ல கோடியில் இதுவும் ஒரு படம்.
RATING [yasr_overall_rating]