News
2019-ல் நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு !
கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஒத்தி வைத்தது.
இதையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு நியமித்தது. இதை தொடர்ந்து, நடிகர் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.
பதவி காலம் முடிவடைந்த நிர்வாகிகள் வழக்கு தொடர முடியாது என தமிழக அரசு தெரிவித்தது. இப்படியாக இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டதுடன், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்தது.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019-ல் நடத்திய தேர்தல் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ணி, முடிவை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கையை தொடங்கலாம் என்றும் மறு தேர்தலுக்கு அவசியமில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.