Reviews
எமகாதகி – திரைவிமர்சனம் !

Cast: Roopa Koduvayur, Narendra Prasath, Geetha Kailasam, Raju Rajappan, Subash Ramasamy, Haritha
Production: Srinivasarao Jalakam
Director: Peppin George Jayaseelan
Cinematography: Sujith Sarang
Editing: Sreejith Sarang
Music: Jecin George
Language: Tamil
Runtime: 1H 53Mins
Release Date: 7 March 2025
தஞ்சை மாவட்டத்தில் ஒரு அழகிய கிராமத்தில் நடக்கும் கதையாக படம் நகர்கிறது. ஊர் தலைவராக இருக்கும் ராஜூ ராஜப்பனின் மனைவியாக வருபவர் கீதா கைலாசம். இவர்களுக்கு ஒரு மகனும்(சுபாஷ் ராமாசமி) மகளும் (ரூபா கொடுவாயூர்) இருக்கின்றனர். மகள் ரூபாவிற்கு மூச்சுத்திணறல் பிரச்சனை என்பது அவ்வப்போது வருகிறது. அதற்காக அவர் சுவாச மருந்தும் எடுத்துக் கொள்கிறார்.
இந்நிலையில், கிராமத்தில் இன்னும் இரண்டு வாரத்தில் கோவில் கொடை விழா நடைபெறவிருப்பதால் ஊர் அதற்காக தயாராகி வருகிறது. சுபாஷ் ராமசாமி கோவில் சிலையின் கீரிடத்தை தன் நண்பர்களின் உதவியோடு திருடி அதை அடமானம் வைத்து தொழில் தொடங்கி அதில் நஷ்டமும் அடைகிறார். இன்னும் இரண்டு வாரத்தில் கோவில் திருவிழா இருக்க, கிரீடம் இல்லை என்று தெரிந்தால் மாட்டி விடுவோம் என்று சுபாஷும் அவரது நண்பர்கள் மூவரும் படபடப்பில் இருக்கின்றனர்.
ஒருநாள், வீட்டிற்கு மிகுந்த கோபத்தோடு வரும் ராஜூ, மனைவி கீதாவை அடித்துவிடுகிறார். எதற்காக அடித்தீர்கள் என்று மகள் ரூபா கேட்க, ரூபாவையும் அடித்துவிடுகிறார் ராஜூ. மேலும் அழுதுகொண்டே அங்கிருந்து சென்றுவிடுகிறார் ரூபா. நள்ளிரவில் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த கீதா, தனது மகள் ரூபா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அதிர்ச்சியில் உறைகிறார் கீதா.
குடும்பத்தில் அனைவரும் ரூபாவின் பிணத்தைக் கண்டு கதறி அழ, தூக்கிட்டு தற்கொலை செய்தது வெளியே தெரிந்தால் கெளரவம் போய்விடும் என்பதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரூபா இறந்ததாக கிராமத்தினரிடம் கூறிவிடுகின்றனர் ரூபாவின் குடும்பத்தினர்.
கிராமமே சோகமாய் உருமாற, அனைவரும் வந்து துக்கம் விசாரிக்கின்றனர். இந்நிலையில், இரவு நெருங்க இறுதி சடங்கு செய்வதற்காக பிணத்தை தூக்க முயல்கின்றனர் கிராமத்து இளைஞர்கள். அப்போது, பிணத்தை தூக்க முடியாமல் அதிகனம் கனக்க, தொடர்ந்து பிணம் அசைவதைக் கண்டு அனைவரும் நாலாபுறமும் தெறித்து ஓடுகிறார்கள்.
மீண்டும் பிணத்தைத் தூக்க முயற்சிக்க, கண்கள் மூடியபடியே பிணம் எழுந்து உட்காருகிறது. இதனால், ஒட்டுமொத்த கிராம மக்களும் வீட்டிலிருந்து வெளியே ஓடுகின்றனர்.இறந்த பெண் எதற்காக இப்படி மக்களை அச்சுறுத்த வேண்டும்.?? வீட்டிலிருந்து ரூபாவின் ஆன்மா தன் உடலை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்காதது ஏன்.? என்பதே படத்தின் மீதிக் கதை.
படம் எப்படி இருக்கு.
இந்த படத்தின் முக்கிய கருவை கண்மூடியே தாங்கிச் செல்கிறார் நாயகி ரூபா கொடுவாயூர். தமிழ் சினிமாவிற்கு அறிமுக நடிகையாக அடியெடுத்து வைத்திருக்கும் ரூபா, தனது கேரக்டரை மிக அழகாக செய்து முடித்திருக்கிறார்.மேலும் அம்மாவாக நடித்த கீதா கைலாசம், இப்படத்திலும் நாயகியின் அம்மாவாக நடித்து அக்கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். மகள் இறந்ததை பார்த்ததும் உறைந்து நின்ற கீதா, க்ளைமாக்ஸில் அழுதுகொண்டே தனது மகள் மீது வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்தும் காட்சி மிக சிறப்பாக அமைந்தது.
இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் நரேந்திர பிரசாத். காதல் பாடலில் நரேந்திர பிரசாத் மற்றும் ரூபா இருவருக்குமான காதல் கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது. ரூபாவின் காலை பிடித்து கதறி அழும் காட்சியில் நம்மையும் சேர்த்து கண்கலங்க வைத்துவிட்டார் NP (நரேந்திர பிரசாத்).மேலும் சுஜித் சாரங்க் இவரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். வீட்டிற்குள் அமைக்கப்பட்ட வெளிச்சம், காதல் பாடலில் கொண்டு வந்த வெளிச்சம், படத்தின் ஆரம்பத்திலேயே வரும் கிராமபாடல் காட்சியமைக்கப்பட்ட விதம் என பல இடங்களில் நன்றாகவே தனது திறமையை நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்
இந்த படத்தின் இசையமாப்பாளர் ஜெசின் ஜார்ஜின் இசையில் இருக்கும் பாடல்களும் கதையோடு நம்மையும் பயணம் செய்ய வைக்க பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.
மேலும் கதை மற்றும் திரைக்கதையை இந்த படத்தின் இயக்குனர் மிக சிறப்பாக அசத்தியிருக்கிறார் .
பிளஸ்
கதையின் நாயகி, கதை , திரைக்கதை , பாடல் மற்றும் கேரக்டர் நடிகர்கள்
மைனஸ்
படத்தின். முதல் 15 நிமிடம்.
மொத்தத்தில்,
எமகாதகி – புதுமையான படைப்பு
Rating 3/5