Connect with us
 

News

துல்கர் சல்மான் படத்தில் பிரபாகரனை பற்றி குறிப்பிட்டு காட்சி அமைக்கப்பட்டதா? – துல்கர் சல்மான் விளக்கம் !

Published

on

துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியுள்ள படம் “வரனே அவசியமுண்ட”. இந்த படத்தில் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த துல்கர் சல்மான் அதில் இடம்பெறும் வளர்ப்பு நாய்க்கு ”பிரபாகரன்” என பெயரிட்டிருப்பதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாய்க்கு பிரபாகரன் என பெயரிட்டிருப்பது தமிழர்களையும், அவர்களது உரிமை போரையும் இழிவுபடுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் துல்கர் சல்மான் ”வரனே அவஷ்யமுண்டு படத்தில் இடம்பெறும் பிரபாகரன் காமெடி தமிழ் மக்களை இகழும் பொருட்டோ, வேறு எந்த உள்நோக்கத்துடனோ வைக்கப்பட்டது அல்ல.

பழைய மலையாள படமான பட்டண பிரவேசம் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவையை சார்ந்து இந்த காட்சி இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் பிரபாகரன் என்ற பெயர் கேரளாவில் பொதுவான பெயர். யாரையும் குறிப்பிடும் எண்ணத்தில் அதை வைக்கவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.மேலும் “தவறு என் மீதோ, இயக்குனர் மீதோ இருப்பதாக கருதினால் எங்களை திட்டுங்கள். ஆனால் எனது தந்தையாரையோ, குடும்பத்தையோ இதில் இழுக்காதீர்கள்” என கூறியுள்ளார்.

இது பற்றி கருத்து கூறியுள்ள நடிகர் இயக்குநர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழன தலைவர் பிரபாகரனை இழிவுப்படுத்தும் வகையில் உள்ள அந்த காட்சியை படக்குழுவினர் நீக்க வேண்டும். இதுபோன்ற தமிழ் மற்றும் தமிழர் அவமதிப்பு காட்சிகளை மலையாள சினிமா எடுக்காமல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், பிரபாகரன் பெயரை தவறாகப் பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் காட்சியமைத்துள்ளது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததோடு தயாரிக்கவும் செய்துள்ளதால் துல்கருக்கு இது பெரிய சிக்கலாகவே உள்ளது.

இதற்கு முன்னர் இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட பெண்ணை Body Shaming செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது, அதற்கும் துலகர் தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.