News
‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் !
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அறியப்படுவது ‘ஆதி புருஷ்’. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே மக்கள் மத்தியில் விவாதிக்கப்படும் படமாக இருந்து வருகிறது. பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் இணைந்துள்ளார் சைஃப் அலி கான்.
ஓம் ராவத் இயக்கிய ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ படத்தில் வில்லனாக தனது அபாரமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் சைஃப் அலி கான். தற்போது, ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வில்லனாக நடிக்க தயாராகியுள்ளார். ‘தன்ஹாஜி’ படத்துக்கு பிறகு சைஃப் அலி கான், ஓம் ராவத், பூஷன் குமார் இணையும் மிகப் பிரம்மாண்ட படம் இது. இந்த வரலாற்று திரைப்படத்தில் கொடிய, ஆபத்தான, குரூரமான குணங்கள் ஒருங்கே அமைந்த பிரதான வில்லனாக நடிக்க சைஃப் அலி கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அவரின் வயதையொத்த நடிகர்களோடு ஒப்பிடுகையில், சைஃப் தனக்கென்று முற்றிலும் வேறுப்பட்ட ஒரு தளத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் அவர் தேர்வு செய்யும் திரைப்படங்கள். திரைப்படங்களின் கதை மற்றும் உள்ளடங்கள் ஒரு புதிய விதியை உருவாக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் சைஃப் பரிசோதனை முயற்சிக்கு எப்போதும் தயாராக இருக்கிறார். கூடவே, ஒரு நடிகராக அவரது நடிப்புத்திறனும், திரை ஆளுமையும் எல்லா விதமான கதாபாத்திரங்களுக்கு அவரை பொருந்தச் செய்கிறது.
இதற்கு முன்பு, பல்வேறு திரைப்படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் ஏராளமான விருதுகளை சைஃப் வென்றுள்ளார். அது ஓம்காராவின் லங்டா தியாகியாக இருக்கட்டும் அல்லது சமீபத்தில் வெளியான தன்ஹாஜியின் உதய்பான் ரத்தோடாக இருக்கட்டும். தீமையை வெல்லும் நன்மையை பற்றிய ஒரு இந்திய காவியத்தின் தழுவலான ஆதிபுருஷ் திரைப்படத்தில் மிகப்பெரிய வில்லனாக சைஃப் நடிக்கிறார்.
இது குறித்து பிரபாஸ் கூறும்போது, ‘சைஃப் அலிகானுடன் பணிபுரிவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஒரு மிகப்பெரிய நடிகருடன் திரையை பகிர்ந்து கொள்வதற்கு நான் ஆவலுடன் இருக்கிறேன்’ என்றார்.
சைஃப் அலி கான் கூறியுள்ளதாவது: ஓமி தாதாவுடன் மீண்டும் பணிபுரிவது நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவரது மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வையும், தொழில்நுட்ப ஞானமும் உள்ளது. தன்ஹாஜி படத்தை அவர் படமாக்கியதன் மூலம் சினிமாவின் மிக உயர்ந்த தொழில்நுட்பத்துக்கு அப்பால் என்னை கொண்டு சென்றார். இந்த முறை நம் அனைவரையும் கொண்டு செல்ல இருக்கிறார்! இது ஒரு தனித்துவமான படைப்பு. இதன் ஒரு அங்கமாக இருப்பதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. ஆற்றல் மிகுந்த பிரபாஸுடன் வாளை சுழற்றவும், ஆர்வமிகுந்த மற்றும் தீயசக்தி கொண்ட ஒரு பாத்திரத்தில் நடிக்கவும் நான் காத்திருக்கிறேன்.
இயக்குநர் ஓம் ராவத் கூறும்போது, ‘நம் காவியத்தில் உள்ள வல்லமை மிக்க வில்லனாக நடிக்க எங்களுக்கு ஒரு அற்புதமான நடிகர் தேவைப்பட்டார். நாம் வாழும் காலகட்டத்தின் மிகச்சிறந்த நடிகர்களின் ஒருவரான சைஃப் அலி கானை விட இந்த சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் வேறு யார் சிறப்பாக நடிக்க முடியும்? தனிப்பட்ட முறையில், அவரோடு பணிபுரிந்த ஒவ்வொரு நாளையும் நான் ரசித்தேன். அவருடனான இந்த மகிழ்ச்சிகரமான பயணத்தை மீண்டும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்றார்.
தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறும்போதும் ‘தன்ஹாஜி படத்தில் தனது உஷய்பான் கதாபாத்திரத்தின் மூலம் நம் அனைவரையும் சைஃப் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஆதிபுருஷ் திரைப்படத்தில் தனது பாத்திரத்தின் மூலம் அதை இன்னும் ஒரு படி மேலே செல்லவிருக்கிறார். பிரபாஸுடன் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான இந்த யுத்தத்தில் அவர்தான் சரியான தேர்வு.
‘ஆதி புருஷ்’ படம் இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ளது. இந்த 3டி கொண்டாட்டம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.
பூஷன் குமார், க்ரிஷான் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2021ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022ஆம் ஆண்டு பிரம்மாண்ட முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.