Connect with us
 

News

டிரைவர் ஜமுனா படத்தில் டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் நடித்த ஜஸ்வர்யா ராஜேஷ் !

Published

on

18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய ஜஸ்வர்யா ராஜேஷ் ‘நீண்ட நாள் கழித்து கோவிட் தொற்று பாதிப்பிற்கு பிறகு இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் கலந்து கொண்டிருக்கிறேன். இதுவே மகிழ்ச்சியை அளிக்கிறது. ‘கனா’ படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் ‘டிரைவர் ஜமுனா’ வெளியாகிறது.

இயக்குநர் கின்ஸ்லின் கோவிட் தொற்றுக்கு முன்னர் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை விவரித்தார். அந்தத் தருணத்தில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. ஏனெனில் அது மிகுந்த பொறுப்புடன் கூடிய பணி. மேலும் அந்த தருணத்தில் ‘க / பெ ரணசிங்கம்’ படத்தை முடித்துவிட்டு, நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, மிக மெதுவாக திரைத்துறையில் பயணிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் டிரைவர் ஜமுனா படத்தின் கதையைக் கேட்டு ஒரே நாளில் இந்தப் படத்தில் நடிக்கலாம் என தீர்மானித்தேன். என்னுடைய திரையுலக அனுபவத்தில் ஒரு கதையைக் கேட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் இதுதான்.

படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர், கதையின் சூழலையும், காட்சியின் சூழலையும் எளிதாக விவரித்ததால், சவாலான காட்சிகளில் கூட சரியாக நடிக்க முடிந்தது. என்னுடைய நடிப்புத் திறன் ரசிகர்களால் பாராட்டப்பட்டால்.. அதற்கான முழு புகழும் இயக்குநரையே சாரும்.‌

‘வத்திக்குச்சி’ படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியிருக்கும் இயக்குநர் கின்ஸ்லினுக்கு இந்த படம் மிகப்பெரிய பாராட்டையும், வெற்றியையும், வரவேற்பையும் அளிக்கும்.

எனது நடிப்பில் உருவான மூன்று திரைப்படங்கள் கொரோனா தொற்று காலகட்டத்தில் டிஜிட்டல் தளங்களில் தான் வெளியானது. ஆனால் ‘டிரைவர் ஜமுனா’ படத்தை பொறுமையுடன் காத்திருந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துவிட்டது. அதிலும் டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு பெருமளவில் குறைந்து விட்டது. ஆனால் சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும், ஒரு படம் வித்தியாசமானதாகவும், தரமானதாகவும் இருந்தால் அதற்கான ஆதரவு குறையவில்லை. ‘டிரைவர் ஜமுனா’ அந்த வகையிலான படம் என்பதால், நம்பிக்கையுடன் நவம்பர் பதினொன்றாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் அதிலும் வேகமாக கார் ஓட்டுவேன். அதனால் சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்தேன். இந்தப் படத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டினேன். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நெடுஞ்சாலைகள் தான் நடைபெற்றது. அதனால் மறக்க இயலாத அனுபவமாகவும் இருந்தது. இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.