Connect with us
 

News

சந்தானம் 30 கோடி சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு அவர் உயர வேண்டும் என்று விரும்புகிறேன் – ஞானவேல்ராஜா

Published

on

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”.  நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன்,  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன்,  தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ்  ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும் போது:

 “ஆனந்தராஜ் சார் கேட்டுக் கொண்டபடியே கண்டிப்பாக மூத்த கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். எங்கள் நிறுவனத்தில் படம் செய்த இயக்குநர்களை விட நான் அதிகமாக பழகிய இயக்குநர் என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார் சார் தான். ‘சகுனி’ பட டைட்டில் முதலில் சூர்யா நடிக்கும் ஒரு படத்திற்காக முடிவான டைட்டில்.

சூர்யாவைக் கொண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் தயாரிப்பதற்கான முயற்சி இருந்தது. அப்பொழுது நான் கற்றுக் கொண்ட சினிமா அறிவு மிகப்பெரியது. ஒரு கதை, கதை விவாதத்தில் எப்படி வளருகிறது என்று நான் பார்த்துக் கற்றுக் கொண்டது  அவரிடம் தான்.  சிலருடைய வளர்ச்சி நம்மை பொறாமைபடச் செய்யும், சிலருடைய வளர்ச்சி நம்மை எரிச்சலடையச் செய்யும், இன்னும் சிலரின் வளர்ச்சி நம்மை உண்மையாகவே சந்தோசப்படுத்தும்.  

நடிகர் சந்தானத்தின் வளர்ச்சி அப்படிப்பட்டது. ஆரம்பத்தில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்கும் போது ஒன்றே முக்கால் இலட்சம் நான் சந்தானத்திற்கு சம்பளமாகக் கொடுத்தேன். அடுத்து 18 இலட்சம், அடுத்து 56 இலட்சம் இன்று 3 கோடி வரை சம்பளமாக கொடுக்கிறேன். 30 கோடி சம்பளமாக கொடுக்கும் இடத்திற்கு அவர் வளர வேண்டும் என்று உண்மையாகவே விரும்புகிறேன்.  அவருடன் சேர்ந்து நானும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன். இயக்குநர் கல்யாணைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தயாரிப்பாளரே சற்று மெதுவாக செல்லலாமா..? என்று கேட்கும் அளவிற்கு வேகமாக செல்பவர்.

திரில்லர் மற்றும் ஆக்சன் படங்கள் வேகமாக எடுத்துவிடலாம். ஆனால் ஒரு காமெடி படத்தினை இவ்வளவு வேகமாக எடுப்பது என்பது மிகப்பெரிய சவால்.  அதை சிறப்பாக செய்து காட்டியிருக்கிறார். எனக்கே யார் யார் நடிக்கிறார்கள் என்பது ஒரு கட்டம் வரை தெரியாது.  ஆடுகளம் நரேன் ஆல் இன் ஆல் அழகுராஜாவில் கலக்கியதைப் போல் இதிலும் கலக்கி இருக்கிறார்.  விழா நாயகன் ஜிப்ரானுடன் இப்படத்தில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இப்பாடல்களை கேட்கும் போது எனக்கு ஆடுகளம் பாடல்கள் நினைவு வருகிறது.

எனக்கு படத்தில் தங்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களை மிகவும் பிடிக்கும். அப்படி ஜிப்ரானையும் பிடித்திருக்கிறது.  ஒளிப்பதிவாளர் ஜேக்கப்னின் வேகம் கல்யாணின் வேகத்திற்கு இணையானது. அவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் கெளரவ் இயக்கத்தில் ஹிந்தியில்  ஒரு பிரபல நாயகனை வைத்து படம் தயாரிக்க இருக்கிறோம். அது குறித்த அறிவிப்பு விரைவில் வரும். இந்த தகவல் இன்னும் கெளரவிற்கு கூட தெரியாது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.