News
ஸ்டெம் செல் விஞ்ஞானியான நடிகை வித்யா பிரதீப் !
பிரபல தமிழ் பட நடிகை வித்யா பிரதீப் விஞ்ஞானியாக தகுதி பெற்றுள்ளார். தமிழ் திரையுலகில் பசங்க 2 படத்தின் மூலம் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகை வித்யா பிரதீப், அதன் பின்னர், அருண் விஜய் நடித்த தடம் படத்தில் நடித்தார். நாயகி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமானவர். இவர் தற்போது டாக்டரேட் பட்டம் பெற்று விஞ்ஞானியாக ஆகியுள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
வித்யா பிரதீப் ஸ்டெம் செல் பயாலஜியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இவரது டாக்டரேட் பட்டம் குறித்து திரையுலக நண்பர்கள், பிரபல நடிகைகள், ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து வித்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில் ‘கடந்த பத்து வருடங்களாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தேன். சென்னைக்கு நான் வந்த காரணம் நிறைவேறி விட்டது.
விஞ்ஞானியாக ஆவதற்கு தீர்மானம் எடுத்ததுடன் கடின உழைப்பு மற்றும் பல தியாகங்களை செய்ததால் மட்டுமே இந்த பட்டம் சாத்தியமாயிற்று. இந்த பட்டத்தால் எனக்கான பொறுப்பு அதிகரித்திருப்பதாக உணர்கிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அறிவியலுக்கும் சமூகத்திற்கும் பயன்படும் வகையில் எனது பணி தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.