Connect with us
 

News

பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் புதிய படம் !

Published

on

தமிழ் திரையுலகில் மாறுபட்ட கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் புதிய திரைப்படத்திற்காக முதன்முறையாக இணைந்துள்ளனர்.

ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் (TWIN TOWER PRODUCTIONS) மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP (D CHRONICLE PRODUCTIONS LLP) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படத்தின் பூஜை அக்டோபர் 21 அன்று கோலாகலமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் M. குரு எழுதி இயக்கும் இத்திரைப்படம், நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் சென்டிமென்ட் ஆகியவை நிறைந்த ஒரு முழுநீள கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகிறது.

படப்பிடிப்பு தொடக்கம்

இப்படத்தின் தொடக்க விழாவில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பலர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இயக்குநர் விருமாண்டி முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

நட்சத்திரக் கூட்டணி

‘காதல்’, ‘பட்டியல்’, ‘வெயில்’, ‘எம் மகன்’, ‘காளிதாஸ்’ என அழுத்தமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்த பரத் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘ந்னா தான் கேஸ் கொடு’ போன்ற மலையாளப் படங்கள் மூலமும், ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அலா பொலேலோ’ பாடல் மூலமும் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்ற ராஜேஷ் மாதவன் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களின் கூட்டணி படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதாநாயகிகளாக சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), மீனாட்சி தினேஷ் மற்றும் ரக்‌ஷனா இந்துசூடன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்புத் திட்டம்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் குடும்பத்தோடு கொண்டாடும் வகையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் கேரளாவின் எழில்மிகு ஆலப்புழா பகுதிகளில் மொத்தம் 45 நாட்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் – மலையாளத் திரையுலகின் திறமையான கலைஞர்கள் இணையும் இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.