News
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை சொல்லும் ஜெயில் !
காவியத் தலைவன் படத்தை தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ஜெயில். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை அபர்னதி நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ராதிகா சரத்குமார் பசங்க பாண்டி, நந்தன்ராம், ரவிமாரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படம் குறித்து இயக்குநர் வசந்தபாலன் கூறியதாவது.
அதிகாரத்தின் பெயரால் சகமனிதர்களுடைய பூர்வீக வாழிடம் பறிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பேசும் படமாக ஜெயில் உருவாகியுள்ளது. எப்போது நீங்கள் குரல் உயர்த்தி பேசுகிறீர்களோ அப்போது உங்கள் முன்னால் ஒரு ஜெயில் வந்து நின்றுவிடும் ஜெயில் என்ற தலைப்பு. இப்படத்தில் ஒரு படிமமாக ஒரு அடையாள குறியீடாக முன்னிறுத்தப்பட்டிருக்கிறது.
மானுட வளர்ச்சிக்கும் மானுடசமூகத்தின் நலனுக்கும் எவையெல்லாம் இடையூறு ஏற்படுத்துகிறதோ அவை அனைத்தும் ஜெயில்தான். இந்த படத்தில் இசை அசுரன் என்று ரசிகர்களால் போற்றப்படும் ஜீ.வி.பிரகாஷ் கர்ணா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
ஒடுக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரல் தான் கர்ணன். நம்முடைய புராணங்கலுள்ள கர்ணன் வாழ்நாள் முழுவதும் அங்கீகாரத்திற்காவும் அதிகாரத்திற்காகவும் வலியை சுமந்து திரிந்தவந்தான். அந்த பண்பு நலன் இந்தபடத்தில் ஜீவிக்கும் பொருந்தும் என்கிறார் வசந்தபாலன்.
கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தில் ஜீ.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.