News
என்னை நடிகராக மாற்றிய கௌதம் சாருக்கு நன்றி – வருண் !

ேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய இப்படத்தின் நாயகன் வருண் ‘”இந்தப் படத்தில் எனக்கு சிறப்பான அனுபவம் கிடைத்தது. இதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். என்னை சிறந்த நடிகராக மாற்றிய கெளதம் சாருக்கு நன்றி. அவரது ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் கேட்டது ஒரு ஜாலியான லவ் படம். ஆனால், எனக்கு அவர் கொடுத்தது ஆக்ஷன் படம். ‘மாவீரன்’, ‘ஜவான்’ படங்களில் பணிபுரிந்த யானிக் பென் இதில் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார். இது எனக்குப் பெருமையான விஷயம். சூப்பரான இசை கொடுத்த கார்த்திக் ப்ரோ, என்னை அழகாகக் காட்டிய கதிர் சார், எடிட்டர் ஆண்டனி அண்ணா, போஸ்டர் டிசைன் செய்த கபிலன் என அனைவருக்கும் நன்றி. படம் ஒரு சீரியஸான மோடில்தான் இருக்கும். டிடி, கிருஷ்ணா என ஜாலியான நபர்களுடன் சீரியஸாக நடித்திருக்கிறேன். ராக்கே, கிட்டி சார், மன்சூர் அலிகான், விசித்ரா மேம் எல்லோருக்கும் நன்றி. வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி சாருக்கும் கெளதம் சாருக்கும் நன்றி. இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலாக உள்ளேன்” என்றார்.