Connect with us
 

News

அறிமுகமான முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை பார்த்துவிட்டு இரண்டாம் மூன்றாம் படங்களில் சோர்ந்து போனவன் அல்ல !

Published

on

இயக்குனர் அமீர்நாயகனாக நடித்து வெளியான” யோகி” திரைப்படம் வெளியாகி 11 வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அப்படத்தின் இயக்குனர் நண்பர் சுப்ரமண்ய சிவா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவுக்கு பின்னுட்டமாக திரைப்பட மக்கள் தொடர்பாளர் ராமன் அவர்கள் அவரின் கருத்தை பதிவு செய்தார் அதனை படித்த இயக்குனர் அமீர் தனது கருத்தை பதிவு செய்திருந்தார் ஒரு கலைஞனின் மனவலியும், மனவலிமையும் அதில் இருந்தது தமிழ் சினிமா பத்திரிகையாளர்களின் உண்மை முகத்தை பிரதிபலிப்பதாகவும் உள்ளது இன்றுவரை அது மாறவில்லை.

இயக்குநர் & நடிகர் அமீர் பதில் :-

அன்பானவருக்கு, உங்கள் கூற்று உண்மை தான். நீங்கள் அப்போது அனுபவத்தில் சொல்லியிருக்கிறீர்கள் அதை மறுக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் ஒரு கலைஞனின் எண்ணத்தை பார்வையாளர்களின் கருத்தைக் கொண்டு எப்போதும் சுருக்கி விட முடியாது.

“யோகி” அவசரத்தில் எடுத்த முடிவு அல்ல அவமானத்தில் எடுத்தது. இன்றைக்கு அமீர் என்னும் படைப்பாளியை காணவில்லை என்று வருத்தம் கொள்பவர்கள் அன்றைக்கு அந்த படைப்பாளிக்கு ஏற்பட்ட இழப்பை, பாதிப்பை, அநீதியை அத்தனையையும் வேடிக்கை பார்த்த பார்வையாளர்கள் தான். ஏன் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சொல்லவேண்டுமென்றால் அநீதி இழைத்தவர்களிடம் பேட்டி எடுத்து (அதில் கொஞ்சமும் உண்மை இல்லாத போதும் கூட) அதை பத்திரிக்கையில் பதிந்து அழகு பார்த்தவர்கள் கூட இங்கே இருக்கிறார்கள். பதிலுக்கு அடுத்த வாரம் நீங்கள் ஒரு பேட்டி கொடுங்கள் அதை பதிவிடுகிறேன் என்று என்னிடம் கொஞ்சமும் தயக்கமில்லாமல் கேட்ட அவர்களின் பத்திரிக்கை தர்மத்தை எண்ணி இன்றும் வியக்கிறேன்.

“யோகி” எனக்கு வியாபாரத்தில் தோல்விப் படமாக இருக்கலாம் ஆனால் நான் அதை தோல்வியாகக் கருதவில்லை தொடக்கமாகக் கருதுகிறேன். மேலும் “யோகி”யின் மூலம் நான் பெற்றதை நானே மறுக்க முடியாது.நான் நடித்த “வடசென்னை” இன்றைக்கு நடித்துக்கொண்டிருக்கும் “நாற்காலி” உள்பட இனி நான் நடிக்கப்போகும் எல்லா திரைப்படங்களுக்கும் அது தான் முதற்படிக்கட்டு.

நான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை பார்த்துவிட்டு இரண்டாம் மூன்றாம் படங்களில் சோர்ந்து போனவன் அல்ல. நிதானமாக ஏறி முதல் நிலை வெற்றியைப் பார்த்தவன், நடிகனாகவும் அப்படியே இருக்க ஆசைப்படுகிறேன் அதுவே இறைவனின் விருப்பமாகவும் இருக்கலாம்.
ஈழப்பிரச்சனை, இயக்குநர் சங்க தேர்தல், FEFSI தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பொது வாழ்க்கை என் திரைப்பாதையை சிதைத்திருப்பதாக நீங்களும் மற்றவர்கள் எண்ணலாம்.

ஒரு வேளை அவைகள் என் கவனத்தை திசை திருப்பியிருக்கலாம் ஆனால் அவைகளை கண்டு கொள்ளாமல் போவது ஒரு கலைஞனின் கடமை அல்ல. தன்னையும் தான் சார்ந்திருக்கும் இடத்தையும் சரி செய்ய முடியாதவன் ஒரு போதும் சமூகத்தை சரி செய்ய முடியாது என்கிற ஆழமான எண்ணத்தை கொண்டவன் நான்.
அதனால் இயன்றதைச் செய்தேன் இனியும் செய்வேன்.எதுவாயினும் உங்களைப் போன்றவர்களின் அன்போடும் ஆதரவோடும் இறைவனின் ஆசியோடும் என்னுடைய திரைப்பயணத்தை தொடர்வேன்.