News
துணிவு படத்தில் நான்தான் வில்லனாக நடிக்க இருந்தது – ஷ்யாம் !
வாரிசு படத்தின் வெற்றியிலும் அதற்கு கிடைத்துவரும் வரவேற்பிலும் உற்சாகமடைந்துள்ள நடிகர் ஷாம் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து பல சுவாரசியமான செய்திகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் முதன்முறையாக தெலுங்கு, தமிழ் என ஒரேசமயத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு. தற்போது வெளியாகி வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே தமிழில் தோழா என்கிற உணர்வுப்பூர்வமான படத்தை கொடுத்த இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இந்தமுறை விஜய்க்கும் அதேபோன்று ஒரு குடும்பப்பாங்கான நெகிழ்ச்சியான படத்தை கொடுத்துள்ளார்.. இந்தப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார்.
விஜய் படங்களை பொறுத்தவரை அவருடன் அந்த படத்தில் இணைந்து நடிக்கும் அத்தனை நட்சத்திரங்களும் ரசிகர்களிடம் கவனம் பெறுவார்கள். அந்தவகையில் வாரிசு படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகிபாபு என பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர்.
குறிப்பாக படத்தில் விஜய்யின் அண்ணன் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் அவருடன் இணைந்து பயணித்துள்ள நடிகர் ஷாமின் நடிப்பிற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வாரிசு படத்தின் வெற்றியிலும் அதற்கு கிடைத்துவரும் வரவேற்பிலும் உற்சாகமடைந்துள்ள நடிகர் ஷாம், வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து பல சுவாரசியமான செய்திகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
“20 வருடங்களுக்கு முன்பு குஷி என்கிற படத்தில் அவருடன் ஒரே ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருந்தேன். அதன்பிறகு இப்போது வாரிசு படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமாக அவரது சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த் என பல சீனியர்கள் நடித்திருப்பதால் வாரிசு குடும்பத்தில் நான் தான் ஜூனியர் என்று கூட சொல்லலாம்.
மாஸ்டர், பீஸ்ட் படங்களுக்கு பிறகு குடும்ப ரசிகர்களையும் கவரும் விதமாக ஒரு படம் பண்ண வேண்டும் என விஜய் சார் நினைத்தார். அதைத்தொடர்ந்தே அவர் வம்சி பைடிப்பள்ளியை அழைத்து கதை கேட்டார். அவர் கூறிய கதை பிடித்துப்போகவே, உடனே ஒப்புக்கொண்டு விட்டார் விஜய்.
விஜய் சாரிடம் கூட பேசும்போது துணிவு படமும் வாரிசுடன் தான் வருகிறது என்று சொன்னபோது ஹை ஜாலி 2 படமும் வரட்டும்.. பார்ப்போம் என்று அதையும் பாசிட்டிவாகத்தான் அணுகினார்.. இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.. துணிவு படத்திலும் வில்லனாக நடிக்க முதலில் எனக்குத்தான் அழைப்பு வந்தது. ஆனால் இயக்குநர் வினோத் கேட்ட தேதிகளும் வாரிசு படத்திற்கான எனது தேதிகளும் ஒரேசமயத்தில் இருந்ததால் என்னால் துணிவு படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதேசமயம் அந்த கதாபாத்திரத்திற்காக என்னை யோசித்ததற்காக இயக்குநர் வினோத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.