Connect with us
 

Reviews

லால் சலாம் – திரைவிமர்சனம் !

Published

on

Cast: Superstar Rajinikanth, Vishnu Vishal, Vikranth, Senthil, Jeevitha, Thambi Ramaiah, Ananthika Sanilkumar, Vivek Prasanna, Thangadurai.
Production: Lyca Productions
Director: Aishwarya Rajinikanth
Screenplay: Vishnu Rangasamy
Cinematography: Vishnu Rangasamy
Editing: B. Pravin baaskar
Music: AR Rahman
Language: Tamil
Runtime: 2H 32 Mins
Release Date: 09/02/2024

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் மிக நீண்ட வருட இடைவெளிக்கு பின்னர் வெளியாகியிருக்கும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரமாக விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. அதை தவிர படத்தில் பல கருத்துக்களை பேசி நடித்துள்ளார் ரஜினிகாந்த் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

1993ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகின்றது கதை. முரார்பாத் என்ற கிராமத்தில் ஒற்றுமையோடும் மதநல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் இந்து – முஸ்லீம் மக்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டினால் ஏற்படும் சின்ன மனஸ்தாபத்தை, அங்குள்ள அரசியல்வாதி தனக்கு சாதகமாக மாற்ற, இரு பிரிவினருக்கும் இடையில் மதக் கலவரத்தை தூண்டுகின்றார்.

இதனால் ஒற்றுமையாக இருந்த இரு பிரிவினருக்கும் இடையில் பெரும் வன்முறை ஏற்படுகின்றது. இந்த சண்டையில்  ரஞ்சி டிராபிக்கு தகுதிபெற்ற ரஜினியின் மகனாக வரும் விக்ராந்த் பாதிக்கப்படுகிறார். விஷ்ணு விஷால் காதலிக்கும் பெண் அரசியல்வாதிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்படுகின்றது. இதனால் ஏற்பட்ட கோபத்தால் ஊர் திருவிழாவுக்கு தேர் கொடுத்து வந்த அரசியல்வாதி தேரை தர மறுக்கிறார். கோயிலுக்கு புதிய தேர் வாங்க விஷ்ணு விஷாலும் அவரது கிரிக்கெட் அணி வீரர்களும் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுகிறதா இல்லையா, விஷ்ணு விஷாலை ரஜினியின் ஆட்கள் என்ன செய்தனர் என்பது மீதிக் கதை. 

தொடக்கம் முதல் க்ளைமேக்ஸ் வரை படம் வலியுறுத்தும் ஒரு மையக் கருத்து மதநல்லிணக்கம். மொய்தீன் பாயாக வரும் சூப்பர் ஸ்டார் தனது சிறப்பான நடிப்பினால் ரசிகர்களை கட்டிப் போடுகின்றார். மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டது மட்டும் இல்லாமல், தனது ரசிகர்களுக்கும் குட்டி ட்ரீட் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

கிராமத்துக் கோயில் பூசாரியாக வரும் செந்தில், ஊர் தலைவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள தம்பி ராமையா ஆகியோர் நம்மை கிராமத்திற்கே அழைத்துச் செல்கின்றனர். இருவருக்கும் கொடுக்கப்படுள்ள வசனங்கள் தியேட்டரில் கைத்தட்டலை அள்ளுகின்றன. விஷ்ணு விஷாலின் காதலியாக வரும் அனந்திகா சனில்குமார் தான் வரும் சில காட்சிகளிலேயே மனம் கவர்கின்றார். விவேக் பிரன்னா, தங்கதுரை ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரத்திற்கு பொருந்திப் போகின்றனர். படம் முழுக்க வரும் விஷ்ணு விஷாலின் நடிப்பு நிறைவைத் தருகின்றது. 

படம் முழுக்கவே மதநல்லிணக்கத்திற்கு இடையூறாக உள்ள சில விஷயங்களை நேரடியாகவே காட்சிப்படுத்தி, இடையூறுகளைக் களைந்து எப்படி மதநல்லிணக்கத்தோடு இருப்பது என அழமாக சொல்லியுள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

லால் சலாம் திரைப்படத்தின் மூலம் தான் சொல்ல நினைத்ததை சிந்தாமல் சிதறாமல் சொல்லி, கைதேர்ந்த இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். படத்தின் கதை மற்றும் திரைக்கதைக்கு ஏற்ற இசையை கச்சிதமாக கொடுத்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் குடும்பத்தோடு மட்டும் இல்லாமல் சமூகமே கொண்டாட வேண்டிய திரைப்படம்.  படத்தில் எந்த ஒரு திருப்புமுனை டிவிஸ்ட் என ஒன்றுமே இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு குடும்ப படமாக உருவாக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

மொத்தத்தில் லால் சலாம் – சலாம் மொய்தீன் பாய்.

Rating :3/5